பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே சிறப்பு பெற்றது நரசிம்ம அவதாரம். இவர் வேலுõர் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல மலையில் யோக நரசிம்மராக அருளுகிறார். இங்குஒரு கடிகை (24 நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தமலையை பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
தல வரலாறு: பிரகலாதனுக்கு பெருமாள் நரசிம்மராக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் இத்தலத்தில் தவமிருந்தனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டதன் பயனாக பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் நிச்சயம் எனக் கருதினர். ஆனால் இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள் தொந்தரவு செய்தனர். ரிஷிகள் தங்களை காக்க பெருமாளை வேண்டினர். பெருமாள் ஆஞ்சநேயரிடம், ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார். ஆஞ்சநேயர் பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கிவந்து அரக்கர்களை வென்று ரிஷிகளை காப்பாற்றினார். பின்னர் ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. பெருமாளும் அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அவர்களது விருப்பப்படி அவர் காட்சி தந்த இத்தலத்தில் யோக நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார்.