பதிவு செய்த நாள்
13
அக்
2014
01:10
கதை கேட்பது என்றால், எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் நான்கு சக்கர வாகனத்தில் கம்பீரமாக வரும் ஒரு பெண்ணுக்கு அறிவுரை சொல்லும் கதையென்றால்...... ரொம்பவே பிடிக்கும். நான்கு சக்கர வாகனம் எது? அவள் யார்? என்பவற்றையெல்லாம் பிறகு பார்க்கலாம்.மிகுந்த பலம் கொண்ட திறமைசாலியாக இருந்தான் ஒரு முட்டாள். தட்டிக் கேட்க ஆளில்லாமல் தவறுகளைத் தவறாமல் செய்து வந்தான்.ஆண் மக்கள் அனைவரும் அவனிடம் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். அவனைத் தட்டிக்கேட்கவும், அவன் அடங்கா விட்டால்,அவனைக் காலடியில் போட்டு மிதிக்கவும்தீர்மானித்து பெண் ஒருத்தி புறப்பட்டாள்.அவளைக் கண்ட முட்டாள்,பெண்ணே! அழகான நீ என்னிடம் சண்டைக்கு வருகிறாயே? என்னைத் திருமணம் செய்து கொண்டால் என்றென்றும் நன்றாக வாழலாம். மறுத்தால் பின்னால் வருத்தப்படுவாய். இப்படித் தான் உன்னைப் போல ஒரு பெண் இருந்தாள்.... விரும்பிவந்தவர்களை விரட்டி விட்டு, பின்னால் சீரழிந்து போனாள். அவள்.... என்று கதை சொல்ல தொடங்கினான். அந்த முட்டாள் சொன்ன கதை இது தான்!சிங்கள தேச மன்னனின் மகள் மந்தோதரி (ராமாயண மண்டோதரி அல்ல) அவளுடைய அழகைக் கேள்விப்பட்டு அரச குமாரர்கள் பலர் மணக்க முன் வந்தனர்.அவர்களை விரட்டி அனுப்பி விட்டு, அறிவுள்ளவள் கல்யாணம் செய்து கொள்வாளா? என்றுபிரசங்கம் வேறு செய்தாள்.
மந்தோதரியின் தங்கைக்குத் திருமணம் நடந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து மந்தோதரியின் மனம் மாறியது. தன் தந்தையிடம் போய், நான் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானமாகச் சொன்னாள். தந்தையோ நடுங்கிப் போனார். மகளே! திருமணம் வேண்டாம் என்று மறுத்த நீ இப்போது இவனைப் போய் விரும்புகிறாயே? பாவத்தின் சின்னமான இவன் செய்யாத குற்றம் இல்லை...... என்று ஒரு பட்டியலே வாசித்தார். ஆனால், மந்தோதரியோ உறுதியாக நின்று அவனையே மணம் செய்து கொண்டாள். அப்புறம் என்ன? அவளின் வாழ்வே சின்னாபின்னமாகிப் போனது.கதையை முடித்த முட்டாள், பெண்ணே! அந்த மந்தோதரி துயரப்பட்டதைப் போல நீயும், விரும்பி வரும் என்னை விலக்கினால், பின்னால் வருந்துவாய், என்றான்.அதைக் கேட்டு, அந்த பெண் ஏறி வந்த போர் வீலர் தன் வாலை முறுக்கி கர்ஜித்தது. அதன் நான்கு கால்களும் பாயத் தயாராயின. அது ஒரு சிங்கம். அதன் மேல் அமர்ந்திருந்தவள் அம்பிகை. அந்த முட்டாள் தான் மகிஷாசுரன். அசுரனைக் கொன்ற அம்பிகை மகிஷாசுரமர்த்தினி என நாமம் பெற்றாள்.பதவி, பண பலத்தால் திமிர் பிடித்த ஆண்மை, பெண்மையைப் புகழ்ந்து பேசும் போது சிக்கிக் கொள்ளாமல், ஆற்றலை மட்டும் பெண்மை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தங்களைக் கேலி செய்பவர்களைத் தள்ளி மிதிக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு அடிபணியக் கூடாது.