பொதுவாக, சிவாலயங்களில் சுவாமி சன்னதியில் எதிரில் ஒரு நந்தி இருக்கும். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள ஆயர்தர்மம் என்னும் கிராமத்திலுள்ள குருநாதசுவாமி கோயிலில் மூன்று நந்திகள் உள்ளன. கல்வி, செல்வம், வீரம் ஆகிய முச்செல்வங்கள் கிடைக்க பிரதோஷ வேளையில் இந்த நந்திகளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்து மூலவர், தட்சிணாமூர்த்தி போல இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் மலர் மொட்டு வைத்து, இடது கையை வரத முத்திரை காட்டியபடி வைத்திருக்கிறார். குரு அம்சமாக அருளுவதால் இவருக்கு குருநாதசுவாமி என்றே பெயர். பூஜையின் போது மஞ்சள் நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், ஞாபக மறதி நீங்கவும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். உற்சவர் சந்திரசேகரர் முன்மண்டபத்தில் இருக்கிறார். சிவனுக்கு வலப்புறம் அம்பாள் அங்காளபரமேஸ்வரி தனி சன்னதியில் இருக்கிறாள்.