கோயில்களின் நுழைவு வாயில் இறைவனின் பல்வேறு உருவச் சிலைகளுடன் கூடிய பிரமாண்டமான கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி மாதவனேஸ்வரர் கோயிலில், கோபுரம் கிடையாது. நுழைவு வாயிலுக்கு மேலே பெரிய நந்தி சிலை மட்டும் இருக்கிறது. சுவாமியின் விமானத்தை நோக்கியபடி இந்த நந்தி இருக்கிறது. இதனை, கோபுர நந்தி என்கிறார்கள். நந்தி, சிவனின் வாகனமாக இருப்பதால், அதற்கு மரியாதை செய்ய வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு அமைத்திருப்பதாகச் சொல்வதுண்டு. இதுதவிர, சிவன் சன்னதி எதிரிலும் நந்தி இருக்கிறது. இக்கோயிலில் கேது பகவானுக்கு தனிசன்னதி இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்ளலாம். இக்கோயிலின் அருகில் முருகன் சிவபூஜை செய்த திருமுருகநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் பிரகாரத்தில் உள்ள கிணற்றின் மேலேயும் பெரிய நந்தி சிலை இருக்கிறது. கோவை அருகில் பேரூரில் உள்ள அம்பலவாணர் கோயிலிலும் கோபுரத்திற்குப் பதிலாக நந்தி சிலை உள்ளது.