அவிநாசி :அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக அலங்கார பூஜை நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில், அன்னாபிஷேகம் நடைபெறும். மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா பூஜை நேற்று மாலை 5.00 மணிக்கு துவங்கியது. அன்னத்தால் அபிஷேகம் செய்து, கனிகளால் அவிநாசியப்பருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், சிறப்பு வழிபாடுகளுக்குபின், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு அபிஷேகத்துக்குபின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சிவனடியார் திருக்கூட்டத்தினர், பெரிய புராணம், தேவாரம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்களை பாராயணம் செய்தனர். இதேபோல், நாராசா வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், குரு க்ருபா பக்த ஜன சபா சார்பில், அன்னாபிஷேக விழா நடைபெற்றது. காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜை, வேத பாராயணம் ஆகியனவும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பழங்கரை சோழீஸ்வரசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளிட்ட அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா, சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது.