பதிவு செய்த நாள்
05
டிச
2014
12:12
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் இன்று மாலை மஹா கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. நாடு முழுவதும் வாழும் ஹிந்துக்கள், இன்று மகா கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடவுள்ளனர். திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில், 50 அடி உயர இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்பு கொப்பரையில் ஆண்டுதோறும், கார்த்திகை தீபத்தின் போது, மஹா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.நடப்பாண்டு இன்று, 1,000 லிட்டர் எண்ணெய், ஆறாயிரம் மீ., திரி, 800 கிலோ எடை கொண்ட பருத்தி துணி கொண்ட மகா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை மட்டுவார் குழலம்மைல தாயுமான ஈசர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, மாலை, 5 மணிக்கு உற்சவ மூர்த்திகள், உச்சி மலை பகுதிக்கு வருவர். அங்கு தீப, தூப, நிவேதனங்களுக்கு பின்ற உற்சவ மூர்த்திகள் முன்னிலையில், மாலை, 6 மணிக்கு வாணவேடிக்கை முழங்க மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. பிறகு, பஞ்ச மூர்த்திகளின் மேள தாளங்களுடன் வீதிவலம் நடக்கிறது. மேலும், கார்த்திகை தீபத்தையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சன்னதிகள், குபேர லிங்கேஸ்வரர் சன்னதிகளில் இன்று இரவு சொக்கப்பனை எனப்படும், பரஞ்ஜோதி வழிப்பாடும் நடக்கிறது.