பதிவு செய்த நாள்
10
டிச
2014
12:12
தர்மபுரி:இருமத்தூர், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள, பழமை வாய்ந்த கோவிலில் அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணகிரி அணையில் இருந்து, தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான இருமத்தூர் வழியாக, தென்பெண்ணை ஆறு கடந்து செல்கிறது. ஆற்றங்கரையோரத்தில் இயற்கை எழிலுடன், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன், ஆஞ்சநேயர், சீதாராமர் கோவில்கள் அமைந்துள்ளது.கோவிலில், சிவன் மேற்கு பக்கம் பார்ப்பது போல் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இதனால், இருமத்தூர் சிவன் கோவிலில் இறந்தவர்களை நினைத்து வணங்கினால், இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதாகவும், பாவம் செய்தவர்கள் இங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி விட்டு, சிவனை வழிபட்டால் புண்ணியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து, இறந்தவர்களுக்கு காரியம் செய்து, தலை மூழ்க ஏராளமான பொதுமக்கள், இருமத்தூர் வந்து செல்கின்றனர். புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் தென்னை ஆற்று சிவன் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு காலத்தில் பக்தர்கள் மற்றும் இறுதி சடங்கு செய்பவர்கள், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் குளித்து செல்கின்றனர்.தற்போது, இக்கோவில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஆகாயத்தாமரை படர்ந்தும், கோவில் அருகே ஆங்காங்கே சாப்பாடு தட்டுகளும், பக்தர்கள் வீசிச் சென்றுள்ள துணிகளும் தேங்கி உள்ளது. ஆற்றங்கரை போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி உள்ளது. இதனால், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சிவன் கோவில் அருகே, சேதமாகி உள்ள படிக்கரையை சீரமைக்கவும், ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரையை, அகற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆற்றங்கரையில், குடிமகன்கள் அமர்ந்து, மதுபானம் குடிப்பதை தடுக்க, போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.