மண்டலபூஜைக்கு பாதுகாப்பு: சன்னிதானத்தில் கூடுதல் போலீசார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2014 12:12
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு 7 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து வரும் 23ம் தேதி தங்க அங்கி பவனி புறப்படுகிறது. மண்டலபூஜைக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இருபது துணை ஆணையர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், 42 இன்ஸ்பெக்டர்கள், 110 எஸ்.ஐ.,க்கள், 2150 போலீசார் புதிதாக நேற்று பொறுப்பேற்றுள்ளனர். சபரிமலை சன்னிதானம் 19 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாகும் போது கட்டுப்படுத்த 140 மத்திய ரிசர்வ் அதிரடி படையினரும், 60 தேசிய பேரிடர் தடுப்பு படை போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்களுடன் ஆந்திரா, கர்நாடகா போலீசாரும் பணியில் ஈடுபடுவர். கேரளாவின் ரகசிய போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு கூட்டம் வந்தாலும் அவர்களைகட்டுப்படுத்தி பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் கிடைக்கச் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பம்பையிலும் இதுபோன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், மணல் பரப்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பவும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
திடீர் மழை: கார்த்திகை மாத தொடக்கத்தில் சபரிமலையில் மழை பெய்யும். அதன் பின்னர் மகர விளக்கு காலம் முடியும் வரை மழை பெய்வது இல்லை. ஆனால் இந்த சீசனில் அடிக்கடி மழை பெய்து வந்தது. நேற்று மாலை மூன்று மணி முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. ஐந்து மணிக்கு மழை சாரலாக பெய்தது.