பதிவு செய்த நாள்
07
ஜன
2015
12:01
திருப்பதி: திருமலையில், ஊடல் உற்சவம், விமரிசையாக நடந்தது. திருமலையில், மார்கழி மாதம் நடைபெறும், 25 நாட்கள், அத்யயன உற்சவத்தின், 17ம் நாளில், பரணய கலகோத்ஸவம் என்ற பெயரில், ஊடல் உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ராமானுஜர், தொடங்கி வைத்த, இந்த மரபு, இன்றும், திருமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள, கிழக்கு மாட வீதியில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியை, எதிர் எதிராக அர்ச்சகர்கள் எழுந்தருள செய்தனர். ஏழுமலையான், நாள்தோறும், கால தாமதமாக வருவதை ஒட்டி, அவர் மீது, தாயார் இருவரும், ஊடல் கொள்வர். அதனால், ஏற்படும் சிறு சண்டையை ஊடல் உற்சவமாக, தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது. இதில், இருபுறமும் அர்ச்சகர்கள், நின்று கொண்டு தாயார்களுக்கு பதிலாக, ஏழுமலையான் மீது பூப்பந்துகளை எறிந்து, தங்கள் கோபத்தை வெளிபடுத்துவர். அப்போது, ஏழுமலையான், தன் மேல் பூப்பந்து படாமல் தற்காத்து கொள்ள தப்பித்து ஓடுவார். பின், ஏழுமலையான், தன் தவறை உணர்ந்து அரிசியில், எழுதி மன்னிப்பு கோருவார். பின், இருவரும், ஊடலை மறந்து ஏழுமலையானுடன், ஒன்றாக இணைந்து, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். திருமலையில், நேற்று, மாலை, 5:00 மணிக்கு, ஊடல் உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.