சபரிமலையில் ஜன.,16 முதல்19 வரை படிபூஜை: 19ல் மாளிகைப்புறம் குருதி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2015 12:01
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின்னர் 16 முதல் 19 வரை நான்கு நாட்கள் படிபூஜை நடைபெறும். 19ல் மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடத்தப்பட்டு 20ம் தேதி காலை நடை அடைக்கப்படும்.சபரிமலையில் நடப்பு மகரவிளக்கு சீசன் நிறைவு கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் 14ம் தேதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலையில் திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தி முடிந்த சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரமும், அதை தொடர்ந்து மகரஜோதி மூன்று முறையும் காட்சி தரும். தொடர்ந்து 7.30 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெறும்.
இதற்கு பின்னர் தினமும் இரவு 7 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் யானை மீது சன்னிதானத்துக்கு எழுந்தருளுவார். 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும். 18ம் தேதி காலை 11 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். அதன் பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறாது. அன்று மதியம் உச்சபூஜைக்கு முன்னதாக களபாபிஷேகம் நடைபெறும்.19ம் தேதி இரவு பத்து மணி வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. அன்று இரவு 11 மணிக்கு மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடைபெறும். 20ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும். ஆறு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி தரிசனம் முடித்ததும் நடை அடைக்கப்படும்.