பதிவு செய்த நாள்
27
ஜன
2015
12:01
தர்மபுரி: தர்மபுரி, சாலை விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா நேற்று நடந்தது. தர்மபுரியில், பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, சாலை விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் நடந்தது. கோவில் சீரமைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில், துர்க்கை அம்மன், சிவலிங்கம், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி உள்ளிட்ட ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 24ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24 மற்றும், 25 ஆகிய தேதிகளில், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாஹூதி, சங்கல்பம் நடந்தது. நேற்று அதிகாலை, விக்னேஷ்வர் பூஜை, நான்காம் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. காலை, 9 மணிக்கும் மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. திருகழுக்குன்றம் மனோஜ்குமார் சிவச்சாரியார் தலைமையில், கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது, விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு ஸ்வாமிகளுக்கு, அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில், விநாயகர் திருவீதி உலா நடந்தது. இன்று முதல், 48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அமுதசுரபி, கோவில் குருக்கள் சிவசுப்பிரமணி மற்றும் திருப்பணி குழுவை சேர்ந்த சம்பத்குமார், கருணாகரன், சிவராஜ், கண்ணன், கிருஷ்ணன், கேசவன், குணசேகரன், ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்தனர்.