திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உச்சிகால பூஜையை காந்திமதி அம்பிகை செய்வதாக ஐதீகம். சிவன், அம்பாள் இருவருக்கும் தனித்தனி கோயிலாக அமைந்த தலம் இது. நெல்லையப்பர், காந்திமதி இருவருக்கும் பூஜை செய்யவும் தனித்தனி அர்ச்சகர்கள் இருக்கின்றனர். இங்கு உச்சிகாலத்தில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் அம்பாள் சன்னதி மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட நைவேத்யத்தை, மேள தாளம் முழங்க சிவன் சன்னதிக்கு எடுத்துச் செல்கின்றனர். அம்பிகையே இந்த பூஜையை செய்வதாக ஐதீகம். அதன்பிறகு அதே நைவேத்யத்தை அம்பாள் சன்னதிக்கு திரும்பவும் கொண்டு வந்து பூஜை செய்கின்றனர். கணவனுக்கு மனைவி அன்னம் பரிமாறி உபசரிக்க வேண்டுமென்பதையும் உணர்த்துவதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இதே போல், திருச்சி திருவானைக்காவல் தலத்திலும் அம்பிகை, உச்சிகாலத்தில் சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இதை உணர்த்தும்விதமாக உச்சிகாலத்தில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அவளுக்கு அணிவித்த வஸ்திரம், மாலையை அணிந்து கொண்டு ஜம்புகேஸ்வரருக்கு பூஜை செய்வார். தம்பதியர் இத்தலங்களைத் தரிசித்தால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.