கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவர் கோயிலில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, அன்னியர்கள் கொள்ளையடிக்க படையெடுத்து வந்தனர். பக்தர்கள், தங்களை காக்கும்படி கீர்த்தனங்கள் பாடி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், வண்டுகளாக வடிவம் எடுத்து அன்னிய மன்னனின் படைகளைக் கொன்றார். இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், அன்னியப்படைகள் கொல்லப்பட்ட நாளில் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீரகேரள பாயாசம் என்ற உணவை நைவேத்யமாக படைக்கின்றனர். பெருமாளை வேண்டி பாடப்பட்ட கீர்த்தனங்கள் ஆதிகேஸ்வஸ்தவம் என்றும், பாட சங்கீர்த்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றைப் படித்தால் பாதுகாப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.