திருப்பதியில் வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டிருக்கும் திருவேங்கடம் என்னும் திருமலை, வைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி, கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து இம்மலையை எடுத்து வந்து சுவர்ணமுகி ஆற்றின் அருகே வைத்தார். பரமபதத்திலிருந்து வந்ததால் இத்திருமலை மிகப்புனிதமானதாகும். இம்மலையில் வாசம் செய்யும் மகாவிஷ்ணுவை தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். சுகமுனிவர், பிருகு முனிவர், பக்த பிரகலாதன் போன்ற புண்ணிய புருஷர்கள் கூட இம்மலையைக் காலால் மிதிக்க பயந்தனர். இவர்கள் மலையடிவாரத்தில் நதியில் நீராடி தவமியற்றினர். ஆழ்வார்களும் மலையடிவாரத்திலேயே நின்று பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்தனர்.