பதிவு செய்த நாள்
25
பிப்
2015
12:02
ஊட்டி : பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும், 27ம் தேதி முதல், அடுத்த மாதம், 3ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, கூடலூர் - தெப்பக்காடு - மசினகுடி - பொக்காபுரம் சாலையில், இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கான தடை தளர்த்தப்படுகிறது. இந்நாட்களில், இச்சாலையில், எந்நேரமும் வாகன போக்குவரத்துக்கு தடை இல்லை.ஆனால், தலைக்குந்தா - கல்லட்டி - மசினகுடி சாலையில், மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு மட்டும், பக்தர்களின் வசதிக்காக, இச்சாலையில் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் அரசு வாகன போக்குவரத்துக்கான தடை தளர்த்தப்படுகிறது. இதர வாகனங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையில், எந்த மாற்றமும் இல்லை. இரவு நேரங்களில், எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள், கல்லட்டி, மசினகுடி, தெப்பக்காடு, தொரப்பள்ளி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில், சமையல் செய்வது, வனத் தீ முட்டுவது, பட்டாசு வெடிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது, மேளம் கொட்டுவது, ஒளி பெருக்கிகளை பயன்படுத்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மீறுவோருக்கு, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இரவு வாகன போக்குவரத்து காரணமாக வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை செலுத்த வேண்டும். வாகனங்களில் அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்ல கூடாது. விழாவையொட்டி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில், காவல் துறையினரால் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. அவசர உதவிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையை, "0423-2526939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறியுள்ளார்.