பதிவு செய்த நாள்
25
பிப்
2015
12:02
நாமக்கல் : "ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதுடன், கோவில் திருவிழாவில் பங்கேற்ற அனுமதி மறுத்துள்ளனர். அவற்றை நீக்கி, ஸ்வாமி வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரங்கனூர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பள்ளிபாளையம் அடுத்த, எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரங்கனூர் கிராமத்தில், தொண்டு வேளாளர், போயர், நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். போயர் சமூகத்தை சேர்ந்த விஜயகுமார், தொண்டு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து, போயர் சமுதாயத்தை ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டனர். அதனால், காலம் காலமாக பொங்கல், மாவிளக்கு எடுத்துச் சென்ற வழிபாடு நடத்தி வந்த எங்களை கோவிலுக்கு வரக்கூடாது என தடுத்தும், மிரட்டியும் வருகின்றனர். அதேபோல் மயானத்திலும், எங்கள் சமூகத்தில் யாராவது இறந்தால், அவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என தடுக்கின்றனர். அதில், ஒரு சிலர் ஜாதிமோதலை தூண்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், 100 குடும்பத்தினர் உள்ளனர். ஆனால், போயர் சமூகத்தில், 18 குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறோம். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்களை வைத்து மிரட்டல் விடுகின்றனர்.அவர்களின்ல் அடாவடியால், எங்களுக்கு எவ்வித பாதுகாப்புக்கும் உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையே நீடித்து வருகிறது. வரும் மார்ச், 5ம் தேதி திருவிழா துவங்குகிறது. அவ்விழாவில், நாங்களும் கலந்து கொண்டு, பொங்கல், மாவிளக்கு எடுத்துச் சென்று ஸ்வாமியை வழிபாடு செய்வதற்கும், எங்களை மிரட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.