பதிவு செய்த நாள்
26
பிப்
2015
12:02
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் வளாகத்தில், கலெக்டர் கணேஷ் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன், வில்வ மரக்கன்றை நட்டு, வனத்துறை சார்பில், மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது, அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தவும், அதன் மூலம் அதிக மழை பொழிவை பெறுவதுடன் பசுமையான தமிழகத்தை உருவாக்கவும், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின்படி, மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, கீரனூர் ஆகிய வனச்சரகங்களில், புதிய மரக்கன்றுகள் நடப்படப்படவுள்ளன. மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் வேம்பு, புங்கன், பாதாம், இலுப்பை, நீர்மருது, குமில், வெல்லி, வேங்கை, தாணி, பலா, பூவரசு, மகாகனி, சிவப்புச்சந்தனம், கருவேல் போன்ற மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோகர்ணம், கோகர்ணேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை சாந்தநாத ஸ்வாமி கோவில், திருவேங்கைவாசல், வியாகரபுரீஸ்வரர் கோவில், கறம்பக்குடி திருமணஞ்சேரி சுகந்த பரிமலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 23 கோவில்களில் வில்வ மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 969 கோவில்களில் வில்வ மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம், மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றி அதிக மழைப் பொழிவைப் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் தங்கராசு,வனச்சரக அலுவலர் குமார், ஆத்மாக்குழுத்தலைவர் ரெங்கராஜன், செயல் அலுவலர் கருணாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுக்குழு உறுப்பினர், அண்ணாதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.