பதிவு செய்த நாள்
02
மார்
2015
12:03
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா, நேற்று துவங்கி நாளை வரை நடக்கிறது. இது, பங்காரு அடிகளாரின், 75வது பிறந்த நாள் என்பதால், பவள விழாவாக அடுத்த ஆண்டு வரை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாமில், 1,091 பேருக்கு, கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சித்தர் பீடத்தில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு, மத்திய அமைச்சர் அனந்த குமார் தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் செந்தில்குமார், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மலரை, மத்திய அமைச்சர் அனந்தகுமார் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றார். பங்காரு அடிகளார் பற்றிய குறுந்தகடை, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வெளியிட, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தணிகாசலம் பெற்றார்.
விழாவில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, பல நலத்திட்ட உதவிகளை வழங்கி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் பேசியதாவது:மேல்மருவத்துார் - பெங்களூரு விரைவு ரயிலுக்கு, ஓம்சக்தி என, பெயர் சூட்டியுள்ளோம். இருமுடி விழாக்காலங்களில், 144 விரைவு ரயில்கள் மேல் மருவத்துாரில் நின்று செல்லும் என்ற நிலை இருந்தது. தற்போது, ஒரு கோடி செவ்வாடை பக்தர்கள், மேல்மருவத்துாருக்கு வருவதற்கு வசதியாக, 200 விரைவு ரயில்களை நிறுத்தும்படி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான், ஓம்சக்தி தொண்டன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். பங்காரு அடிகளாரிடம் இருந்து, தன்னலம் அற்ற தொண்டு, தியாகம் இவற்றை கற்றுக் கொண்டேன். பவள விழா ஆண்டில், எங்களின் பெங்களூருக்கு வந்து, ஆசி வழங்கினால், எங்கள் உள்ளங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடையும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழா குழு தலைவர் வெங்கடசாமி வரவேற்றார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் நன்றி கூறினார்.