பதிவு செய்த நாள்
09
மார்
2015
11:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் படி வழியில் வரும் பக்தர்கள், 60ம் படி அருகே புதிதாக இழைப்பாரும் வகையில், மண்டபம் கட்டும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல, படி வழி மற்றும் சாலை வழி ஆகிய இரு பாதைகள் உள்ளன. அதிகப்படியான பக்தர்கள், படி வழியாக வந்து முருகனை வணங்கி செல்கின்றனர். மலை கோவிலை அடைய, 1,320 படிகள் ஏற வேண்டும். இப்படிகளை, ஓய்வு எடுக்காமல் ஏறமுடியாது. ஆங்காங்கே பக்தர்கள் இழைப்பாறி செல்ல, பல நன்கொடையாளர்கள் மூலம் யூ.ஆர்.சி., நிறுவனத்தார், ஐந்து மண்டபங்கள் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது, படிகள் மிகவும் செங்குத்தாக செல்லும், 60ம் படி என சொல்லும் இடத்தில், புதிதாக இழைப்பாரும் மண்டபம் அமைக்க முடிவு செய்தனர். இதற்கு சென்னிமலை மேலப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட, அந்தியூர் டாக்டர் சங்கர் குடும்பத்தினர், 4.50 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து, புதிய இழைப்பாரும் மண்டபம் அமைக்கிறார். இதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் பிரபாகர், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். டாக்டர் சங்கர் குடும்பத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னிமலை டவுன் பஞ்., முன்னாள் தலைவர் நடேசன், சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முருகன் அடிமை சுப்புசாமி, ஈரோடு யூ.ஆர்.சி., குழும பொறியாளர்கள் பங்கேற்றனர்.