பதிவு செய்த நாள்
10
மார்
2015
12:03
ஊத்துக்கோட்டை: ஒரே கிராமத்தில், இரண்டு பெருமாள் கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் உள்ளது ராதா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பகுதிவாசிகள் பங்களிப்புடன், கோவில் சீரமைக்கும் பணி ஓராண்டாக நடந்தது. பணிகள் முடிந்து, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, கடந்த 8ம் தேதி, பிற்பகல் 1:30 மணிக்கு அனுக்ஞை, பகவத், ஆச்சரிய வர்ணம், முதல் கால ஹோமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சியும்; இரவு 9:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விமானம், கண்திறத்தல், மகாசாந்தி ஹோமம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், கும்ப புறப்பாடு, மகா கும்பாபிஷேகமும் நடந்தன. இரவு 9:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு கோவில் அதே கிராமத்தில், ரெட்டித் தெருவில் உள் அலர்மேல் மங்கா நாயிகா உடனுறை சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி முதல், அனுக்ஞை, வாஸ்து ஹோமம், எஜமான சங்கல்பம், மகா கும்ப ஸ்தபானம், சாற்று மறை, தீர்த்த பிரசாத ஹோமம், விஸ்வரூபம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, உடனுறை சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.