பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்களிடம் குறிப்பிட்ட தொகை வசூலிப்பதால், ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே தினசரி வாக்குவாதம் நடக்கிறது. மேலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் கோவில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து, திருத்தணிக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், குறைந்த வாடகையில் குடில்கள், அறைகள் விடப்படுகிறது.
குளிர்சாதன அறைகள்: பேருந்து நிலையம் அருகில், தணிகை இல்லம், அரக்கோணம் சாலையில் கார்த்திகேயன் குடில், திருக்குளம் அருகில், சரவணபொய்கை என, மூன்று இடங்களில் தேவஸ்தான விடுதிகள் கட்டி பக்தர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.இந்த விடுதிகளில், 55 குளிர்சாதன குடில், 36 சாதாரண குடில், 133 அறைகள் என, ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு, குளிர்சாதன குடிலுக்கு, ௧,௦௦௦ ரூபாயும், சாதாரண குடிலுக்கு, 600 ரூபாயும், அறைக்கு, 300 ரூபாயும் என, கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
55க்கு 6 மட்டுமே: கோவில் விடுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, தண்ணீர், குளிர்சாதன பெட்டி, ஹீட்டர் பழுது போன்றவையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தற்போது, 55 குளிர்சாதன குடில்களில், ஆறு குடில்களில் மட்டுமே ஹீட்டர், குளிர்சாதன பெட்டி வேலை செய்கிறது. மேலும், 15 குடில்களில் ஒரு குளிர்சாதன பெட்டி (ஒரு குடிலில் இரண்டு இயந்திரங்கள் இருக்கும்) வேலை செய்கிறது.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: தேவஸ்தான குடில்களில், அறை வாடகை எடுக்கும்போது, கோவில் ஊழியர்கள் அறைக்கு ஏற்றவாறு கட்டணம் பெறுகின்றனர். ஆனால், அறையில் என்னென்ன குறைபாடுகள் உள்ளது என, கூற மறுக்கின்றனர்.உதாரணமாக, குளிர்சாதன குடிலில், குளிர்சாதனம் வேலை செய்வதில்லை, ஹீட்டரில் சுடுநீர் வருவதில்லை. சில நேரங்களில் சாதாரண தண்ணீரே வருவதில்லை. கோவில் ஊழியர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. சில நேரங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது, ஒரு மணி நேரம் கழித்து வரும் என, அலட்சியமாக கூறுவதுடன், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். கோவில் நிர்வாகம் உரிய முறையில் குடில்கள், அறைகளை, பராமரிக்கவில்லை. தேவஸ்தான குடில்களில் தங்கும் பக்தர்கள் மனவேதனையுடன் தான் மூலவரை தரிசிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேவஸ்தான குடில்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது என்பது உண்மை தான். தற்போது கோடைக்காலம் என்பதால், குடிநீர் ஆதாரம் குறைந்துள்ளது. லாரியின் மூலம், தண்ணீர் கொண்டு வருகிறோம்.தெக்களூரில் இருந்து மலைக்கோவில், தேவஸ்தான குடில்களுக்கு குழாய் அமைத்துள்ளோம். மின்மோட்டார் இயக்குவதற்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு, மின்வாரியத்திற்கு குறிப்பிட்ட தொகையும் செலுத்தியுள்ளோம். அவர்கள் மின் இணைப்பு கொடுத்தால், தண்ணீர் பிரச்னை முழுமையாக தீர்த்துவிடும். பழுதடைந்த குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக, புதிய பெட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 20 குளிர்சாதன பெட்டிகள் வந்துள்ளன. அவை ஓரிரு நாட்களில் பொருத்தப்படும். மீதமுள்ள பெட்டிகளும், ஒரு மாதத்திற்குள் கொள்முதல் செய்து குடில்களில் பொருத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.