பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
01:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 25 லட்சம் மதிப்பில், அம்மன் தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றத்தில் நால்வரால் பாடல் பெற்ற பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, பதினோறு நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா, இம்மாதம் 22ம் தேதி துவங்கி, மே 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏழாம்நாள் நடைபெறும் விழாவிற்கு வேதகிரீஸ்வரர், அம்பாள், வினாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என, 5 தேர்கள் உள்ளன. இவற்றில் அம்பாள் தேர் பழுதடைந்ததால், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்ய, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்காக, 10 லட்சம் ரூபாயை துறை ஒதுக்கி உள்ளது; 15 லட்சம் ரூபாய் நன்கொடையாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, தேர் செய்யும் பணி துவங்கி, நடைபெற்று வருகிறது.