பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
வேப்பம்பட்டு : திருவள்ளூர் அருகே, பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவிலில் ரகசிய பாதாள அறை கண்டறியப்பட்டதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகே தொட்டிக்கலை கிராமத்தில், 500 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. சிவஞான சுவாமிகளால் பாடப் பெற்ற இக்கோவில் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. கோவில் புனரமைப்புக்கான திருப்பணிகள் 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூலவர் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்குமிடையே மண்டபம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகளை தொழிலாளர்கள் 26ம் தேதி மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடராஜர் சன்னிதிக்குச் செல்லும் படிக்கட்டின் அருகே பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி ஆழத்தில் ரகசிய அறை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பதட்டமடைந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன், தொட்டிக்கலை ஊராட்சித் தலைவர் சீனிவாசன், செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து ரகசிய பாதாள அறையை பார்வையிட்டனர். இதுகுறித்து, சிதம்பரேஸ்வரர் கோவில் பாஸ்கர குருக்கள் கூறும் போது, "தரைத் தளத்திலிருந்து இரண்டரை அடி ஆழத்தில் உள்ள இந்த பாதாள அறை, 20 அடி நீளம், மூன்றரை அடி அகலம் மற்றும் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உட்பகுதி மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு அறை பெரியதாகவும், மூன்றாவது அறை சிறியதாகவும் உள்ளது. ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள அறையின் தரைப்பகுதி மணல் பரப்பாகவும், மேல் பகுதி கருங்கற்களால் மூடப்பட்டும் காணப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு, கோவில்களில் விக்கிரகங்களை பாதுகாத்து வைப்பதற்காக இது போன்ற, பாதாள அறைகளை உருவாக்கப்படுவது உண்டு. இதுவும், அதே போன்று பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்றார். எனினும், "கோவிலில் கண்டறியப்பட்ட பாதாள அறை எதற்காக அமைக்கப்பட்டது, பாதாள அறையின் உட்பகுதியில் வரலாற்றுச் சுவடுகள் உள்ளனவா என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பூண்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து ஆய்வு மேற்கொள்வர் என, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக பாதாளத்தில் மூடப்பட்டிருந்த அறைக்குள் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்திருக்கலாம் என, பக்தர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், பாதாள அறையை முதலில் பார்த்த போது, எந்த பொருளும் உள்ளே காணப்படவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.