பதிவு செய்த நாள்
14
மே
2015
11:05
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா எனப்படும் வசந்த உற்சவம் கடந்த, 6ம் தேதி துவங்கியது. அம்மன் பஞ்ச பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி, நாளை இரவு நடக்கிறது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்ச பிரகார விழா கடந்த, 6ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினசரி காலை, 10 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடு நடந்து வருகிறது. இன்று இரவு, 9 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மன் ஐந்து பிரகாரங்களிலும் உலா வரும் நிகழ்ச்சி, நாளை, (15ம் தேதி) நடக்கிறது. நாளை காலை கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் புனித நீர் கொண்டு வரப்படுகிறது. யானையில் ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக கோவில் வந்தடைகிறது. அந்த நீரில் மதியம், 2 மணியில் இருந்து மகா அபிஷேகம் நடக்கிறது. பின், பஞ்ச பிரகாரம் வலம் வருதல் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி, ஐந்து பிரகாரங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.