சதுரகிரி மலைக்கு ஆபத்து பயணம்: அரசுத்துறைகள் அசட்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2015 11:05
வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களுக்கும் இயற்கை ஒரு காரணமாக அமைந்தாலும், ஆபத்து மிகுந்த அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுத்துறைகள் எடுக்காததே காரணம்.
இங்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி, சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் அடிவாரத்திலிருந்து 9 கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று கோயிலை அடைய வேண்டும். இப்பாதையின் பல இடங்கள் குறுகலாகவும், பள்ளத்தாக்கை ஒட்டி மிக ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளன. பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதையை பாதுகாப்பு நிறைந்ததாக மாற்ற அறநிலையத்துறையோ, வனத்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் தவிப்பு: மலையில் பலாஅடி கருப்பசாமி கோயில் பகுதி, சங்கிலிப்பாறை (அத்தியூத்து), அடிவாரம் தாணிப்பாறை உட்பட பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையின் பல இடங்களில் ஆறுகள், ஓடைகள் குறுக்கிடுகின்றன. சாதாரண நாட்களில் மிக குறைந்த அளவு நீர் செல்லும்போதே அந்த இடங்களை பக்தர்கள் தட்டுத்தடுமாறி கடந்து செல்லவேண்டியுள்ளது.மழை ஏற்படும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்கள் அந்த இடங்களை கடந்து வரமுடியாமல் ஒவ்வொரு முறையும் தவிக்கின்றனர். ஆற்றில் நீர் குறையும்வரை பல மணிநேரம் அங்கு மழையில் நனைந்துகொண்டே சிறுகுழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் தவிக்கின்றனர். பின்னர் தீயணைப்பு படையினர் வந்து அவர்களை கயிறுகட்டி மீட்கின்றனர். இது ஒவ்வொருமுறையும் வாடிக்கையாக நடக்கிறது.
அலட்சியம்: பல ஆண்டுகளாக இப்படி நடந்தும் இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறநிலையத்துறையோ, வனத்துறையோ, மக்கள் பிரதிநிதிகளோ முன்வரவில்லை.பல மணிநேரம் கொட்டும் மழையில் பக்தர்கள் நனையவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆற்றில் வெள்ளம் சென்றாலும் அதை கடக்க முயன்று நீரில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். பக்தர்கள் உயிரிழப்பு ஏற்படுவதற்கு இதுவே மிக முக்கிய காரணம்.அந்த இடங்களில் சிறு பாலம் அமைக்கப்பட்டிருந்தாலே பக்தர்கள் எளிதில் கடந்து சென்றிருப்பர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையில் சிக்கியிருக்க மாட்டார்கள். பக்தர்கள் மழைக்கு ஒதுங்க மலைப்பாதையின் நடுவிலே ஒரு கொட்டகை அமைத்திருந்தால் பதட்டமின்றி அங்கே ஒதுங்கியிருப்பார்கள். அதைக்கூட செய்யவில்லை.
ஆற்றில் கோயில் வளாகம்: பக்தர்கள் பாதுகாப்புக்கும், அருவிகளில் குளிக்கவரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அங்கு ஒரு போலீசார் கூட இருப்பதில்லை. அமாவாசை நாட்களில் மட்டும் அடிவாரத்தில் இரு போலீசார் பெயரளவில் பாதுகாப்பு பணியில் இருப்பர். மழைகாலங்களில் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகளை அங்கிருந்து அகற்றவோ, பக்தர்களை எச்சரிக்கை செய்யவோ போலீசார் இருப்பதில்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அருவிகளில் மழை நேரத்தில் கூட குளிக்கின்றனர்.
இறங்கி தரிசனம்: மலை உச்சியில் உள்ள பலாஅடி கருப்பசாமி கோயில் வளாகம் முழுவதும் ஆற்றிற்குள்ளேயே அமைந்துள்ளது. ஆற்றிற்குள் இறங்கித்தான் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அங்கும் அதைதொடர்ந்து அடிவாரம் வரை பல இடங்களில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையுடன் சேர்ந்தே ஆறு, ஓடைகள் செல்கின்றன. மழை அதிகமாக பெய்து ஓடைகளில் நீர் அதிகரித்துவிட்டால் பக்தர்கள் நடந்து செல்லும் பாதைக்கு வெள்ளம் வந்துவிடுகிறது. கருப்பசாமி கோயிலில் தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்களைகூட இழுத்துச் செல்கிறது. அந்த இடங்களில் ஆறுகளின் கரைகளை ஒருசில அடிகள் உயர்த்தி ஆற்றின் மட்டத்தை சிறிது ஆழப்படுத்தியிருந்தாலே போதும் இந்த வெள்ளப்பெருக்கு பக்தர்களை பலி வாங்கியிருக்காது.
சில லட்சங்கள் தான்: ஒரு சில லட்சங்கள் செலவிலேயே இப்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது இருமாவட்ட அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என ஒருபட்டாளமே குவிந்து இரண்டு நாட்களுக்கு மேலாக நிவாரணப் பணிகளை கவனிக்க மலையை முற்றுகையிட்டனர்.இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஒவ்வொருமுறை நிவாரணப் பணிக்காக செலவிடும் தொகையில் பத்தில் ஒருபங்கை செலவழித்தால்கூட பாதைகளை செப்பனிட்டு ஆற்றின் கரைகளை பலப்படுத்தியிருக்கலாம். அதைக்கூட செய்யாமல் விட்டதின் விளைவு... இத்தனை உயிரிழப்புகள்.
எது தடைக்கல்: இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோயில் அமைந்துள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள கோயிலுக்கு செல்ல வெறும் 3 அடி பாதை மட்டுமே அறநிலையத்துறை வசம் உள்ளது. இன்னும் ஒருசில அடி பாதை கிடைத்தால் மட்டுமே எந்த வசதியும் செய்ய முடியும். அதற்கு வனத்துறை அனுமதி கிடைக்காததால் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. பாதை சீரமைப்பை பொறுத்தவரை அதை உடனே செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். துறையின் சார்பில் செய்யாவிட்டாலும் பக்தர்கள் தாங்கள் சொந்த செலவிலேயே பாலம் கட்டித்தரவும், ஆறுகளை சீரமைக்கவும் முன்வருகின்றனர். வனத்துறை அனுமதி இதற்கு தடைக்கல்லாக உள்ளது என்றனர். உயிரிழப்பை தடுக்க செய்ய வேண்டியவை...: மலைப்பாதையில் ஆறுகள், ஓடைகள் குறுக்கிடும் இடங்களான சங்கிலிப்பாறை (அத்தியூத்து), வெற்றிலைக்கேணி, தாணிப்பாறை கருப்பசாமி கோயில் அருகே பக்தர்கள் ஆற்றை கடக்கும் வகையில் இருவழிப்பாதையாக சிறு பாலங்கள் அமைக்க வேண்டும். அங்குள்ள ஆற்றின் கரைகளை சில அடிகள் உயர்த்தலாம். பாலங்களின் அருகே இருபுறமும் பக்தர்கள் மழைக்கு ஒதுங்க பாதையின் மீதே நீண்ட நிழற்குடை அமைக்க வேண்டும். இது பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன் ஆற்றில் நீர் வடியும் வரை காத்திருப்பதற்கு உதவியாக இருக்கும். மலை உச்சியில் பலாஅடி கருப்பசாமி கோயில் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். கோயில் சன்னிதானம் முன் துவங்கி ஆற்றின் கரைப்பகுதி முழுவதும் கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றில் அதிகநீர் சென்றாலும் பக்தர்கள் மேடையில் ஏறிநின்று பாதுகாப்பாக இருக்க முடியும். அத்துடன் பாலம் வழியாக பக்தர்கள் ஆற்றை கடக்க முடியும். அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே நீர் செல்ல தடையாக உள்ள பாறை கற்களை அகற்றி, ஆற்றின் தரைப்பகுதியை ஆழப்படுத்தலாம்.
படிவெட்டிப்பாறை என்ற இடத்தில் பெரிய பாறைமீது பக்தர்கள் நடந்து செல்கின்றனர். இது மிக குறுகலான பாதையாகவும், மறுபுறம் பெரிய பள்ளத்தாக்கும் உள்ளது. இதில் அவ்வப்போது பக்தர்கள் விழுந்து காயம் அடைகின்றனர். மழைநேரத்தில் ஆற்றுநீருக்குள் வழுக்கி விழுந்து மேலே வரமுடியாமல் தத்தளிக்கின்றனர். இந்த இடத்தில் பாறையை சமப்படுத்தி பள்ளத்தாக்கில் பக்தர்கள் விழுந்துவிடாமல் இருக்க பாறையில் கம்பிகளால் தடுப்பு அமைக்கலாம். திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் போலீசார் இருப்பதில்லை. எல்லா நாட்களிலும் போலீசார் அங்கு முகாமிட்டு பக்தர்களை அறிவுறுத்த வேண்டும். அருவிகளில் குடித்துவிட்டு அத்துமீறும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு வசதியாக அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கலாம்.
நீண்ட தூரம் வரும் பக்தர்களுக்கு மலையின் சூழல், விபரம் சொல்லி அனுப்ப வேண்டும். ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு, நீரழிவு போன்ற நோய்வாய்ப்பட்டவர்களும் மலையேறிச் சென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். மாதத்திற்கு ஓரிருவர் இதுபோல் உயிர் இழக்கின்றனர். அவர்களுக்கும், காயம் அடைபவர்களுக்கும், ஆபத்தில் சிக்கியவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க மலையிலும், அடிவாரத்திலும் நிரந்தர மருத்துவ மையம் அமைக்க வேண்டும்.
மலையில் உள்ள கோயில் வளாகம்: முழுவதும் பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு செய்யும் வகையில் ஒலிபெருக்கி வசதி செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் இவற்றை செய்தால் மட்டுமே உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். தற்போது நடந்த இந்த கொடூர இறப்புகள் இனியும் நடக்காமல் இருக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
நாங்கள் பொறுப்பல்ல: இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோயில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் சாம்பல்நிற அணில்கள் சரணாலய எல்லைக்குள் உள்ளது. சரணாலயப்பகுதியில் மத்திய வனத்துறையின் அனுமதியுடன் தான் பணிகளை செய்ய முடியும். இங்குள்ள அதிகாரிகளால் எந்த அனுமதியும் கொடுக்க முடியாது. கோயிலுக்கு கூடுதல் பாதை வசதி வேண்டும் என்றால் அறநிலையத்துறையினர் தான் முயற்சி செய்து பெற வேண்டும். இங்குள்ள கோயில் நிர்வாகமோ, மாவட்ட அதிகாரிகளோ கடிதம் எழுதினால் பலன் கிடைக்காது.தமிழக அரசே முயற்சி செய்ய வேண்டும். வனத்துறையின் சார்பில் பாலம் அமைக்க சட்டத்தில் இடமில்லை. தற்போது 3 அடி பாதைதான் கோயிலுக்கு உள்ளது என்றாலும் தினமும் பக்தர்கள் நடந்து சென்றதால் 10 அடிவரை நடைபாதை உருவாகிவிட்டது. பக்தர்கள் நெரிசலை தவிர்க்க புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதித்துள்ளோம். இதைத்தான் எங்களால் செய்ய முடியும். மற்றபடி கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அடிவாரத்திலேயே பாதுகாப்பு அறிவுரை கூறியபடிதான் உள்ளோம் என்றனர்.
அரசாணை வெளியிட்டும்-நிதி ஒதுக்கவில்லை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பாதையை மேம்படுத்த அரசாணை வெளியிட்டும், இது வரை நிதி ஒதுக்காததால் எவ்வித பணிகள் நடக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.பாதுகாப்பற்ற இம்மலைப்பாதையில் பயணித்த 8 பக்தர்களை காட்டாற்று வெள்ளம் பலி கொண்டு விட்டது.மதுரை, விருதுநகர் மாவட்டம் எல்லையில் தாணிப்பாறையில் அமைந்துள்ள சதுரகிரி மலை கோயில்களுக்கு பக்தர்கள் வனப்பகுதி வழியாக 7 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகின்றனர். இந்த பாதை நடக்க வசதியில்லாமல், குறுகலாக, அதலபாதாளங்களாக, பாறைகளாகவே உள்ளது. பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே சென்று வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் ஆடி, தை அமாவாசை மாதங்களில் மட்டுமே சதுரகிரி கோயில்களுக்கு சென்ற வந்த பக்தர்கள், தற்போது மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.கோயில் செல்லும் பாதைகளில் பாறைகளை அகற்றி படிக்கட்டுகள் கட்டவும், கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கும் இடம் , பல இடங்களில் தரை பாலம் என 9 கோடி ரூபாய் செலவில் வசதிகள் ஏற்படுத்த வனத்துறை சார்பில் 2015 ஜனவரியில் முடிவு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கான நிதி ஒதுக்கப்படாததால் சதுரகிரி மலை மேம்பாட்டு பணியானது இது வரை துவக்கப்படாமல் உள்ளது. ரோப் கார் மூலம் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் திட்டத்தை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சென்று பல மாதங்களாகியும் இன்று வரை அது தொடர்பான நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயில் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 73 ஏக்கர் நிலத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி,கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இதன் பணிகள் துவங்கி விட்டன. வனத்துறை பணிக்கான நிதியை விரைவில் வழங்கி பணியை உடனே துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.