பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
திருவண்ணாமலை: ஆரணி, வரதராஜபெருமாள் கோவில், தேர் சக்கரம் பலவீனமாக இருந்ததால், நேற்று நடக்க இருந்த தேரோட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி டவுன் சார்பானார் பேட்டை பகுதியில், பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், 90ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பெருந்தேவி சமேத கில்லா வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, 9 மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. 10 அடி தூரம் மட்டும் தேர் இழுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. வீதி உலா வராமல் திடீரென தேர் நிலை நிறுத்தப்பட்டது, பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகரன் கூறியதாவது: தேரின் சக்கரம், இரண்டு நாட்களாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இதில் சக்கரம் மிகவும் பலவீனமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க, இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேருக்கு, எட்டு லட்ச ரூபாய் மதிப்பில், புதிதாக இரும்பு சக்கரம் செய்ய பெல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய சக்கரம் தயாரானவுடன் தேரோட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.