மராட்டிய வீரர் சிவாஜி தன் குருவாகிய ராமதாசருக்கு ஏராளமான பொன்னையும், பொருளையும் காணிக்கையாகக் கொடுத்தனுப்பினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட ராமதாசர், பதிலுக்கு கையளவு மண், சில கூழாங்கற்கள், கொஞ்சம் குதிரைச்சாணம் ஆகியவற்றை சிவாஜிக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றைப் பார்த்த சிவாஜியின் அன்னை கடும்கோபம் கொண்டாள். உயர்குடியில் பிறந்த ராஜகுமாரனுக்குக் கொடுக்கக்கூடிய பொருள்களா இவை... ? என்று கேட்டாள். உடனே சிவாஜி அடக்கத்துடன், அம்மா, இவையெல்லாம் குருதேவரின் தீர்க்க தரிசனம் மிக்க குறிப்புகள். இந்த மண் - தீயவர்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கும் நாடு முழுவதையும் நான் வென்று, மீட்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தக் குழாங்கற்கள் - எனது நாட்டை வலிமைமிக்க மாபெரும் கோட்டைகளால் பாதுகாப்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தச் சாணம் - எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய பெரிய குதிரைப் படையை அமைப்பேன் என்பதைக் குறிக்கிறது என்று அமைதியாக கூறினார். அன்னையின் மனம் தெளிவு பெற்றது.