பதிவு செய்த நாள்
07
ஜூலை
2011
11:07
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் இன்று (7ம் தேதி) ஆனி திருமஞ்சன விழா நடக்கிறது. வைணவர்கள் விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும், சைவர்கள் சிவனை அபிஷேகப்பிரியன் என்றும் கூறுவர். குறிப்பாக, விதவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யும்போது, உளம் மகிழ்ந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள்பவர் சிவன் என்பது வேதவாக்கு. அதனால், ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட நாள்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தை பொறுத்தவரை, இன்று (7ம் தேதி) திருமஞ்சன விழாவாக சிவ ஸ்தலங்களில் கொண்டாடப்படுகிறது. இன்று சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் சிவப்பெருமானை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தால் அல்லது சிதம்பரம் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலே மோட்சம் கிட்டும். திருச்சியில் மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவில், மேலப்புலிவார்டு பூலோகநாதஸ்வாமி கோவில், உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி கோவில், துவாக்குடி திருநெடுங்களநாதர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆனி திருமஞ்சன விழா இன்று சிறப்பாக நடக்கிறது. திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவிலில், காலை 7 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.