பதிவு செய்த நாள்
10
ஜூன்
2015
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் நிலத்தில் கட்டிய குடியிருப்புகளை, கோவிலுக்கே தானமாக எழுதித் தர, ஆக்கிரமிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கோவில் நிர்வாகம் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்படவும், அவர்கள் ஒப்புக் கொண்டனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றில், பிள்ளையார்பாளையம், கச்சபேஸ்வரர் நகரில் உள்ள, 8.86 ஏக்கர் நிலம் முக்கியமானது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை, 1988ல், அப்போதைய கோவில் நிர்வாக அலுவலர், 176 பேருக்கு வீட்டு மனைகளாக பிரித்து, குத்தகைக்கு அளித்தார். இதற்காக ஒரு மனைக்கு டிபாசிட் 2,500 ரூபாய், 6 மாத வாடகை முன்பணம், 500 ரூபாய் நன்கொடை, தரை வாடகையாக மாதந்தோறும் 20 ரூபாய் வசூலிக்க, முடிவு செய்யப்பட்டது. கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், அங்கு வீடுகள் கட்ட தீர்மானித்தனர்.
இந்நிலையில், அடுத்த சில நாட்களிலேயே, குத்தகை உத்தரவை ரத்து செய்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். வழக்கு வாபஸ் எனினும், அதைப் பொருட்படுத்தாமல், குத்தகை எடுத்த கும்பல், அங்கு வீடுகள் கட்ட துவங்கியது. ஆணையரின் உத்தரவை எதிர்த்து, கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் 1989ல், வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருந்த கால கட்டத்தில், கோவில் நிலத்தில் வீடுகள் கட்டி, சிலர் குடியேறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு, மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, கோவில் நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு என, அறிவித்து, கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில், 2003ல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய கோவில் நிலத்தில் இருந்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, 212 ஆக அதிகரித்தது. வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சில கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் மேல்முறையீட்டு மனுவை, கடந்த ஆண்டு வாபஸ் பெற்றனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்து, குடியிருப்போர் சங்க உறுப்பினர்களிடம் கருத்து கேட்டார். தொடர்ந்து, கடந்த மாதம் 19ம் தேதி, கோவில் நிர்வாக அலுவலர் தலைமையில், விரிவான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது, 212 மனையின் தரை வாடகை, முன்பணம், நன்கொடை மற்றும் குடியிருக்கும் கட்டடத்தை கோவிலுக்கு தானம் தருவது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இவற்றுக்கு சம்மதமா என, கேட்கப்பட்டது. இதற்கு குடியிருப்புவாசிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை, இணை ஆணையருக்கு, கோவில் நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதன்படி, குடியிருப்புவாசிகளிடம் இருந்து, தரை வாடகை, முன்பணம், நன்கொடை, இதுவரை இருந்ததற்கான வாடகை என, முதல் கட்டமாக, 1 கோடி ரூபாயும்; தவிர ஆண்டுதோறும் 15 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் எனவும், துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வசூல் நடவடிக்கை: இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஒருவர் கூறுகையில், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தோர், கோவில் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இனி, அந்த இடத்திற்கான வாடகையை நிர்ணயம் செய்து, எங்களுக்கு தகவல் வரும். அதன் பிறகு வாடகை மற்றம் அனைத்தும் வசூல் செய்யப்படும் என்றார்.