பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
திருவள்ளூர்: பெரியகுப்பம் வழி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம், மகாத்மா காந்தி நகரில், 30 ஆண்டுகளாக, வழி சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கோபுரம் மற்றும் சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கை விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம் மற்றும் முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை 9:00 மணியளவில், கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி, லட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது. பின்னர் 10:00 மணியளவில், கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில், பெரியகுப்பம், மணவாள நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.