பதிவு செய்த நாள்
13
ஜூலை
2011
11:07
சிவகிரி:வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து அர்த்தாநாரீஸ்வரராக திருக்காட்சி கொடுக்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் இரண்டு மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று திருச்செங்கோட்டிலும், மற்றொன்று வாசுதேவநல்லூரிலும் உள்ளது. சிவனும், சக்தியும் வேறு அல்ல என்பதை அறிவுறுத்தவும், சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவன் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவும், உலக வாழ்வியலில் ஆணும் பெண்ணும் சரிசம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க சிவபெருமான் உமையொரு பாகனாக, அம்மையப்பனாக சக்திக்கு சரிபாதி உடலை தந்து இந்த கோயிலில் எழுந்தருளியுள்ளார். வரலாற்று சிறப்பும், புராண பெருமையும் இணைந்த இக்கோயிலின் தேர் பழுதாகி விட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக திருவிழாக்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தெப்பம் கட்டமுடியாத காரணத்தால் தோற்றிய காலத்திலிருந்தே தெப்பதிருவிழா நடந்தது இல்லை. இதனால் பல்வேறு திருப்பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. ஈரோடு தொழிலதிபர் தேவராஜ் மூலஸ்தான கோபுரங்களையும், தங்கபழம் குடும்பத்தினர் தேரையும், மற்றும் நாடார் உறவின் முறையினர் நீராழி மண்டபத்தினுடன் கூடிய தெப்பத்தனையும் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் பல்வேறு திருப்பணி செய்து கடந்த 3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலின் ஆனிதேரோட்ட விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோயில் மண்டபகப்படிதாரர்கள், பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடந்தது. 9ம் திருநாளான நேற்று அம்மையப்பன் காலை 8.45 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.தேரோட்டத்தை எம்எல்ஏ., துரையப்பா, நெல்லை அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் புகழேந்திரன், சிவகிரி தாசில்தார் ராஜாராம் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர். சரியாக 11.15க்கு தேரோட்டம் தொடங்கி, நான்கு ரதவீதி வழியாக வந்து 12.15க்கு நிலையத்தை அடைந்தது.தேர் நிலையம் வந்ததும் பக்தி கோஷத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தேர் நிலையம் வந்ததும் திருவாடூதுறை மகா சன்னிதானம் சிவப்பிரகாசபண்டார சுவாமிகள் சிறப்பு பூஜைசெய்தார்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராமசாமி, செயல் அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்தனர். இரவு 10 மணிக்கு அம்மையப்பன் தேர் தடம் பார்க்க வெட்டும் குத்திரையில் திருவீதிலா வந்தார். 10ம் திருநாளான இன்று (13ம் தேதி) காலை தீர்த்தவாரி, இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.