ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். அவரது மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். விதி விளையாடியது. பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. ரேணுகாவின் உடல் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயினால் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்த அவள், வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சளைப் பூசிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். சிவபார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்பிகை ரேணுகாவின் முன்தோன்றி, தன் அம்சத்தை அவளுக்கு வழங்கி அருள்புரிந்தாள். அன்றுமுதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள். இதன் காரணமாகவே, வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு, மாரியம்மனை வேண்டும் வழக்கம் ஏற்பட்டது. நோயில் இருந்து விடுபட்டவர்கள் வேப்பிலை ஆடை கட்டியும், கூழிட்டும், அக்னி மிதித்தும் அம்பிகையை வழிபட்டு வருகின்றனர். அவளுக்கு பல தலங்களிலும் கோவில் கட்டினர். அவளே அகிலம் போற்றும் மாரியம்மனாக எங்கும் இருந்து அருளாட்சி நடத்துகிறாள்.