பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
12:07
திருச்சி: திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார். ஹிந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில செயலாளர் பால்ராஜ்சாமி கொடுத்த மனுவில், ‘திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலைச் சுற்றி, ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் பாதை என்.எஸ்.பி., ரோடு, நந்திகோவில் தெரு, ஆண்டாள் வீதி, கருப்பண்ணசாமி கோவில், சின்னக்கடை வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது. கிரிவலப்பாதையில், வியாபாரிகள் இருபுறமும் கடை வைத்துக்கொண்டு இடையூறு செய்கின்றனர். மேலும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களை இந்த பகுதியில் நிறுத்தி இடையூறு செய்கின்றனர். பல முறை சுட்டிக்காட்டியும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கிரிவலம் செல்லும் நாளிலாவது, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தண்ணீர் அமைப்பு செயலாளர் நீலமேகம், பொன்மலை பகுதி சி.பி.ஐ., எம் கட்சியினர் கொடுத்துள்ள மனுவில், ‘திருவெறும்பூர் ஒன்றியம், கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமாவடிக்குளம் என்ற அம்மன் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், புழக்கத்தில் இல்லாத குளங்கள் நிரந்தர குப்பை கிடங்காக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தில் குப்பை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. குப்பைகளுடன் கலந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, இதை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளக்காடு கிளை ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில், ராணி என்பவர் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில், 2,300க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பொது கழிவறை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் நல அமைப்பு சார்பில் ராமகிருஷ்ணன் கொடுத்துள்ள மனுவில், ‘திருச்சி மாநகரில், போக்குவரத்து பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையில், போக்குவரத்து தொடர்பான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எல்.பி.ஜி., டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்க மாநில தலைவர் கணேஷ் தலைமையில் வந்தவர்கள் கொடுத்துள்ள மனுவில், ‘எங்களுக்கு நிரந்தர சம்பளம் தருவதில்லை. காஸ் ஏஜன்ஸியினர் வாடிக்கையாளரிடம் வாங்கும்படி கூறுகின்றனர். இதை தவிர்த்து, எங்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து, தொழிலாளர்களுக்கான சட்ட விதிமுறைகளையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.