துயரங்களில் அமிழ்ந்து கிடக்கும் ஆணின் மனம் ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல துன்பத்திலிருந்து விலகிவிடுகிறது. ஒரு மனைவியினுடைய அன்பான பார்வையிலே பசுமையான தோட்டங்களைப் பார்க்கலாம். அவளுடைய தூய்மையான உள்ளத்திலே ஞான நூல்களைக் காணலாம். பெண் என்ற சொல்லுக்குப் பேணும் தன்மையுடையவள் என்பது பொருள். கணவனையும் குடும்பத்தையும் மக்கள், வீடு, மாடு முதலியவற்றையும் பேணிப் பெருமைப்படுத்துகிறவள் பெண். விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் உயிர்நாடி பெண்ணுலகமே. உலக நலன்கள் அனைத்தும் பெண்மையாய் அமைந்து கிடக்கின்றன. பெண் கருணைக்கும் பொறுமைக்கும் உறைவிடமாய் விளங்குபவள். அதனாலன்றோ பிள்ளைப் பேற்றை இறைவன் பெண்ணிடமே அமைத்தனன். ஞானத்தையும் பெண்ணாகக் கூறுகின்றது ஞானநூல். இல்வாழ்க்கைக்கு அச்சாணியாக இருந்து துணைபுரிபவள் பெண். இல்லாலாக ஆள்பவள் ஆதலின் இல்லாள் எனப்படுகிறாள்.