பதிவு செய்த நாள்
26
ஆக
2015
12:08
புதுச்சேரி : புதுச்சேரி வந்த பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா, அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். மாநில பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா நேற்று புதுச்சேரி வந்தார்.சென்னையில் இருந்து கார் மூலம் காலை 9:00 மணியளவில் வந்த அவர், 9:30 மணியளவில் சிதம்பரம் புறப்பட்டு சென்றார். அங்கு நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, பகல் 12:55 மணிக்கு மீண்டும் புதுச்சேரி திரும்பினார்.அண்ணாமலை ஓட்டலில் நடந்த கலந்துரையாலில் 1:30 மணி முதல் 2:15 மணி வரை கலந்து கொண்டார். மதிய உணவுக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மாலை 3.10 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்திற்கு குண்டு துளைக்காத காரில் வந்தார்.ஆசிரம டிரஸ்டிகள் மனோஜ்தாஸ் குப்தா, மாத்திரி பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு, அரவிந்தர் சமாதி, அன்னை பயன்படுத்திய அறையை தரிசனம் செய்து விட்டு, நுாலகத்தில் உள்ள வரலாற்று நுால்களை பார்வையிட்டு, 3:25 வெளியில் வந்தார். அடுத்து, ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்திற்கு 3.30 மணிக்கு வந்தார். 40 நிமிடங்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 4:10 மணிக்கு கூட்டத்தை முடித்து புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்று, விமானம் மூலம் பெங்களூரு சென்றார்.