பதிவு செய்த நாள்
27
ஆக
2015
05:08
1. பந்து ஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி
கருணயா த்வயி உபாவேசித ஆத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலம்
அபி ஜகத் வீக்ஷ்ய மாயா விலாஸம்
நாநாத்வாத் ப்ராந்தி ஜந்யாத் ஸதி கலு
குண தோஷ அவயோதே விதி: வா
வ்யாஸேத: வா கதம் தௌ த்வயி
நிஹித மதே: வீத வைஷம்ய புத்தே:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அளவு கடந்த கருணை மூலமாக நான் எனது உறவினர்கள் மீது வைத்துள்ள பாசத்தை துறந்து விடுவேனாக! உன்னிடம் மட்டுமே எனது மனதை முழுமையாகச் செலுத்தியவனாக, இந்த உலகம் முழுவதுமே உனது விளையாட்டு என்று அறிந்தவனாக, அனைத்தையும் விலக்கி வாழ்பவனாக சுதந்திரமாக எங்கும் நான் செல்வேன். நல்லது, கெட்டது என்று பிரித்து அறியும் ஞானம் உள்ளவருக்கு மட்டுமே பிடிப்பும் விலக்கும் உண்டாகின்றது. உன்னிடம் தனது மனதை முழுமையாக அர்ப்பணித்த மனிதன் தீய அறிவு என்பதே இல்லாதவனாக மாறுகிறான். பின்னர் பிடிப்பும் விலக்கும் எப்படி உண்டாகும்?
2. க்ஷுத் த்ருஷ்ணா லோபமாத்ரே ஸதத
க்ருத திய: ஜந்தவ: ஸந்தி அநந்தா:
தேப்ய: விஜ்ஞானவத்வாத் புருஷ: இஹ
வர: தத் ஜநி: துர்லபா ஏவ
தத்ர அபி ஆத்மா ஆத்மந: ஸ்யாத் ஸுஹ்ருத்
அபி ச ரிபு: ய: த்வயி ந்யஸ்த சேதா:
தாப உச்சித்தே: உபாயம் ஸ்மரதி ஸ ஹி
ஸுஹ்ருத் ஸ்வாத்ம வைரீ தத: அந்ய:
பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் தங்களது பசி மற்றும் தாகம் ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதில் மட்டுமே மனதை உடைய விலங்குகள் பல உள்ளன. ஆனால் ஆராய்ந்து பார்க்கின்ற அறிவுள்ளதால், மனிதன் அவற்றை விட மேலானவனாக உள்ளான். இப்படிப் பட்ட மனிதப்பிறவி கிடைப்பது என்பது மிகவும் அரியது ஆகும். மனிதன் என்பவன் தனக்குத்தானே நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளான். உன்னிடம் தனது மனதை அர்ப்பணம் செய்தவனாக, அதன் மூலம் தனது துன்பங்களை நீக்கும் வழியை ஆராய்பவன் தனக்குத்தானே நண்பனாக உள்ளான். இப்படி இல்லாதவன் தனக்குத் தானே எதிரி அல்லவா?
3. த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க: இவ நஹி
குரு லோக வ்ருத்தே விபூமந்
ஸர்வ ஆக்ராந்தா அபி பூமி: ந ஹி சலதி
தத: ஸத் க்ஷமாம் சிக்ஷயேயம்
க்ருஹ்ணீயாம் ஈச தத்தத் விஷய பரிசயே
அபி அப்ரஸக்திம் ஸமீராத்
வ்யாப்தத்வம் ச ஆத்மந: மே கதந குரு
வசாத் பாது நிர்லே பதா ச
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அருள் இருந்துவிட்டால் இந்த உலகில் உள்ளவற்றில் எந்தப் பொருள்தான் குருவாக இருக்க முடியாது? உலகில் உள்ளவை அனைத்தையும் தாங்கி நிற்கும் பூமியானது அசையாமல் உள்ளதே! இந்தப் பூமி மூலமாக நான் பொறுமை என்பதை அறிகிறேன். காற்று வீசும்போது அனைத்து பொருட்களின் மீதும் தொடர்பு ஏற்பட்டாலும். ஒட்டுதல் என்பது இல்லை. இதன் மூலம் பற்று என்பது இல்லாத தன்மையை அறிகிறேன். ஜீவாத்மா பற்றுதல் இல்லாமல் எங்கும் நிறைந்துள்ளது என்பதை ஆகாயம் என்ற குரு மூலம் உணர்கிறேன்.
4. ஸ்வச்ச: ஸ்யாம் பாவந: அஹம் மதுர உதகவத்
வஹ்நிவந் மா ஸம க்ருஹ்ணாம்
ஸர்வ: அந்நீந: அபி தோஷம் தருஷுதாம்
இவ மாம் ஸர்வ பூதேஷு அவேயாம்
புஷ்டி: நஷ்டி: கலாநாம் சசிந: இவ தநோ:
ந ஆத்மந: அஸ்தி இதி வித்யாம்
தோய ஆதி வ்யஸ்த மார்தாண்டவத் அபி
ச தநுஷு ஏகதாம் த்வத் ப்ரஸாதாத்
பொருள்: குருவாயூரப்பா! நான் தண்ணீரைப் போன்று தெளிவாகவும், தூய்மையாகவும், (அனைவருக்கும்) இனிமையாகவும் இருக்க வேண்டும். நெருப்பைப் போல் அனைத்தும் உண்பவனாகவும், இருந்தாலும் பாவம் அற்றவனாகவும் மாற வேண்டும். மரத்தில் எப்படி நெருப்பு மறைவாக உள்ளதோ அதுபோல் எனது ஆத்மா மறைவாக பல உடல்களிலும் உள்ளது என்று ஞானம் பெறுவேன். தேய்வதும் வளர்வதும் சந்திரனின் பிறைகளுக்கு மட்டும் உண்டாவது போல், எழுச்சியும் வீழ்ச்சியும் இந்த உடலுக்கு மட்டுமே, ஆத்மாவிற்கு அல்ல என்பதை உணர்வேன். சூரியன் ஒன்று என்றாலும் வெவ்வேறு தண்ணீரில் பலவாகத் தோன்றுவது போல் பல உடல்களில் இருந்தாலும் ஆத்மா ஒன்று என நான் உணர வேண்டும்.
5. ஸ்நேஹாத் வ்யாத அஸ்த புத்ர வ்யஸந
ம்ருத கபோதாயித: மாஸ்ம பூவம்
ப்ராப்தம் ப்ராச்நந் ஸஹேய க்ஷுதம் அபி
சயுவத் ஸிந்துவத் ஸ்யாம் அகாத:
மா பப்தம் யோஷித் ஆதௌ சிகிநி சலபவத்
ப்ருங்கவத் ஸாரபாகீ
பூயாஸம் கிந்து தத்வத் தந சயந வசாந்
மா அஹம் ஈச ப்ரேணசம்
பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! வேடன் ஒருவன் புறாவின் குஞ்சைக் கொன்றான். இதனால் புத்திரசோகம் தாங்காமல் தாய்புறா தனது உயிரை விட்டது. அதனைப் போன்று நான் இருக்கக்கூடாது (பாசத்திற்கு அடிமை ஆகக்கூடாது). மலைப்பாம்பு போன்று தானாகவே வலியக் கிடைக்கும் உணவை உண்டு எனது பசியைப் போக்குவேனாக, கடலைப் போன்று ஆழமாகவும், கம்பீரமாகவும் இருப்பேனாக, வெட்டுக்கிளி தானாகவே சென்று தீயில் விழுவது போல், பெண்களின் சுகத்திற்காக நான் விழாமல் இருப்பேனா. தேனீ எப்படி மலர்களில் உள்ள தேனை மட்டும் எடுக்கிறதோ அதுபோல் நான் பொருள்களின் சாரத்தை உணரவேண்டும். ஆயினும் தேனீ சேர்த்து வைக்கும் பொருள்போல் (தேன்) நான் பொருளைச் சேர்த்து வைத்து அழியக்கூடாது.
6. மா பத்யாஸம் தருண்யா கஜ இவ வசயா ந
ஆர்ஜயேயம்தந ஓகம்
ஹர்த்தா ந்யஸ்தம் ஹி மாத்வீ ஹர இவ
ம்ருகவந் மா முஹம் க்ராம்ய கீதை:
நா அத்யாஸஜஜேய போஜ்யே ஜஷ:
இவ படிசே பிங்களாவத் நிராச:
ஸுப்யாம் பர்தவ்ய யோகாத் குரர இவ விபோ
ஸாமி ஷ: அந்யை: ந ஹந்யை
பொருள்: குருவாயூரப்பா! பெண் யானையைக் கண்டதும் ஆண் யானை தன் வசம் இழந்து விடுவது போல், நான் பெண்ணாசையில் கட்டுப்படாமல் இருக்க வேண்டும். தேனீ எப்படித் தனது செல்வமான தேனைச் சேர்த்து வைத்துக் கொள்கிறதோ, அதுபோல் நான் பொருளைச் சேமித்து வைக்காமல் இருக்கவேண்டும். காரணம் அந்த பொருளை மற்றவர் எளிதில் கவர்ந்து விடஇயலும், இசையில் மயங்கும் விலங்குகள் போல் நான், பகவத் தொடர்பு இல்லாத இசையில் மயங்கக்கூடாது. உணவின் மீது உள்ள ஆசையால் மீன் தூண்டிலில் சிக்குவது போல் நான் உணவின் ருசியில் அதிக விருப்பம் கொள்ளக்கூடாது. பிங்களை என்ற வேசியைப் போன்று நான் பற்றுதல் இன்றி உறங்க வேண்டும். (அவள் ஒருநாள் திடீரென ஞானம் பெற்று, த்யானம் கைகூடி பற்றுதல்களை விட்டாள்). குரரம் என்ற பறவை மாமிஸத் துண்டைக் காப்பாற்ற பெரு முயற்சி எடுப்பதுபோல், நான் பொருளைச் சேர்த்து காப்பாற்றும் துன்பம் அடையாமல் இருப்பேன்.
7. வர்த்தேய த்யக்த மாந: ஸுகம் அதி
சிசுவந் நிஸ்ஸஹாய: சரேயம்
கந்யாயா ஏகசேஷ: வலய இவ விபோ
வர்ஜித அந்யோந்ய கோஷ:
த்வத் சித்த: ந அவ புத்யை பரம் இஷு
க்ருத் இவ க்ஷ்மா ப்ருத் ஆயாந கோஷம்
கேஹேஷு அந்ய ப்ரணீதேஷு அஹி:
இவ நிவஸாநி உந்திரோ: மந்திரேஷு
பொருள்: குருவாயூரப்பா! சிறிய குழந்தை எப்படி பற்றுதல், கர்வம் இல்லாமல் உள்ளதோ அதுபோல் நான் ஆனந்தமாக இருப்பேனாக, ஒரு வளையல் மட்டுமே அணிந்த பெண்ணின் கைகளில் எப்படி ஓசை இல்லாமல் உள்ளதோ, அதுபோல் நான் தனிமையில், வீண் பேச்சுக்களைத் தவிர்த்து இருப்பேனாக, அம்புகளைத் தயாரிப்பவன் அரசன் வரும் ஊர்வல ஓசையைக் கேட்காமல், தனது செயலில் கண்ணாக இருப்பதுபோல், நான் உன்னிடம் மட்டுமே மனதை உடையவனாக, வேறு எதனையும் நினைக்காதவனாக இருப்பேன். எலிகளின் பொந்துகளில் பாம்பு வாழ்வதுபோல், (எனக்கென்று வீடு வைத்துக் கொள்ளாமல்) பிறர் வீடுகளில் வாழ்ந்து வருவேனாக.
8. த்வயி ஏவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி
ஜகத் இதி ஊர்ண நாபாத் ப்ரதீயாம்
த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி
த்ருடம் சிக்ஷயே பேசகாராத்
விட் பஸ்ம ஆத்மா ச தேஹ: பவதி குரு
வர: ய: விவேகம் விரக்திம்
தத்தே ஸஞ்சிந்த்ய மாந: மம து பஹு
ருஜா பீடித: அயம் விசேஷாத்
பொருள்: குருவாயூரப்பா! நீ உருவாக்கிய உலகத்தை உன்னிடத்தில் ஒன்றி இருக்கும்படி செய்கிறாய் என்பதை, நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் சிலந்தி மூலமாக அறிகிறேன். உன்னையே எப்போதும் த்யானிக்கும் மனம், உனது ஸ்வரூபமாகவே மாறி விடுகிறது என்பதை குளவியின் மூலமாக அறிய வேண்டும் (புழுவைக் குளவி கொட்டி கொட்டி அந்தப் புழு குளவியாக மாறுகிறது). இந்த உடல் ஒருநாள் மலம் போன்று இழிந்ததாகவோ அல்லது சாம்பலாகவோ மாறப்போகிறது. இந்த உடலே எனக்கு ஒரு குரு - எப்படி? உடலைப் பற்றிச் சிந்திக்கும்போது ஞானமும் பற்றின்மையும் ஏற்படுகிறது. குறிப்பாக எனது உடல் பல பிணிகளால் பீடிக்கப்பட்டிருந்த காரணத்தினால் அதிகமான ஞானத்தையும் பற்றின்மையையும் எனக்கு அளிக்கிறது.
9. ஹீஹீ மே தேஹ மோஹம் த்யஜ பவந
புர அதீச யத் ப்ரேம ஹேதோ:
கேஹே வித்தே கலத்ர ஆதிஷு ச விவிசிதா:
த்வத் பதம் விஸ்மரந்தி
ஸ: அயம் வஹ்நே: சுந: வா பரம் இஹ பரத:
ஸாம்ப்ரதம் ச அக்ஷி கர்ண
த்வக் ஜிஹ்வா ஆத்யா: விகர்ஷந் அவசம் அத
இத: க: அபி ந த்வத் பத அப்ஜே
பொருள்: குருவாயூரப்பா! எனது உடலின் மீது எனக்கு உள்ள மயக்கத்தை அகற்றுவாய். இந்த உடல் மீது உள்ள விருப்பத்தினால் அன்றோ மக்கள் தங்கள் வீட்டின் மேலும், செல்வத்தின் மீதும், மனைவி மற்றும் உறவினர்கள் மீதும் தங்கள் வசமிழக்கின்றனர்? அதனால் உனது திருவடிகளை மறந்தும் விடுகின்றனர். இந்த உடல் உயிரை விட்ட பின்னர், நெருப்பு அல்லது நாய்களுக்குச் சொந்தம் ஆகின்றது அல்லவா? உயிருடன் உள்ளபோதும் கூட இந்த உடலைக் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களும் தங்கள் வசப்படுத்தி இழுக்கின்றன. அவற்றில் ஒரு புலனாவது உனது திருவடிகளின் அருகில் உடலைக் கொண்டு செல்வதில்லையே! என்ன கஷ்டம்! என்ன கஷ்டம்!
10. துர்வார: தேஹ மோஹ: யதி புந: அதுநா
தர்ஹி நிச்சேஷ ரோகாந்
ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குரு தவ பத
பங்கேருஹே பங்கஜ அக்ஷ
நூநம் நாநா பவ அந்தே ஸமதிகதம் அமும்
முக்தி தம் விப்ர தேஹம்
க்ஷுத்ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய
ரஸே பாஹி மாம் மாருத ஈச
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரை போன்று அழகான கண்களை உடையவனே! இந்த உடலின் மீது கொண்ட ஆசையை நீக்க இயலவில்லை என்றால், நீ உடனே உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும், நீக்கி உன் திருவடிகளின் மீது ஆழ்ந்த பக்தியை உண்டாக்க வேண்டும். இந்த உயர்ந்த ப்ராமணப் பிறவி என்பது பல பிறவிகளுக்குப் பின்னர் அடையப்பட்டது. இது மோட்சம் பெற்றுத்தர வல்ல பிறவியாகும். ஆகவே இந்தப் பிறவியை அற்பமான சுகத்தில் ஈடுபடும்படியாக நீ தள்ளிவிடாதே! என்னைக் காப்பாற்றுவாயாக!