பதிவு செய்த நாள்
01
செப்
2015
02:09
கொர்ரி டென் பூம் அம்மையார் ஜெர்மனி நாட்டில் குடியேறிய வெளிநாட்டவர். இவரது தந்தை வில்லியம். தேவனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து மட்டுமின்றி முழு உலகத்தில் இருந்தும் அழித்துவிட வேண்டும் என ஹிட்லரின் இயக்கம் கங்கணம் கட்டியிருந்தது. யூத மக்கள் உயிருக்கு பயந்து ஜெர்மனியை விட்டு வெளியேறினர். ஆனால், வில்லியம் குடும்பத்தினர் யூதர்களை காப்பாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தனர்.இதையடுத்து வில்லியம், அவரது மகள்கள் கொர்ரி, பெட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் சிறையில் கொர்ரியும், பெட்சியும் அடைக்கப்பட்டனர். வில்லியம் மற்றொரு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் அவர் இறந்து விட்டார்.சிறைக்கு வந்த பின்னரும் கொர்ரியும், பெட்சியும் சிறையிலிருந்த பெண் கைதிகளை ஒன்று கூட்டி பைபிளை வாசித்தனர். ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்தனர். இதனால் கைதிகள் ஆறுதலடைந்தனர்.
இது வெளியே தெரிய வரவே, காவலர்கள் பெட்சியையும், கொர்ரியையும் சித்ரவதை செய்தனர்.ஒரு கிறிஸ்துமஸ் தினம். இயேசுபிறந்த மகிழ்ச்சியை சிறையில் அனுபவித்துக் கொண்டிருந்த பெட்சியை, காவலர்கள் கொலை செய்துவிட்டனர். பெட்சியின் மரணம் கொர்ரியை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியது என்றாலும் விசுவாசிக்கிறவன் பதறான் என்ற தேவ வசனத்திற்கு ஏற்ப, அவர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.தேவனையே முழுமையாக நம்பியிருந்த அவரது வாழ்வில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒருமுறை வேறு ஒரு அம்மையாரை விடுதலை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக கொர்ரியை விடுதலை செய்து விட்டார்கள். இதுதான் சமயம் என, கொர்ரி வெளிநாடு சென்று விட்டார்.அதன்பிறகு 64 நாடுகளுக்கு சென்று இயேசுவைப்பற்றி பேசினார். தேவனுக்காக நாடோடியான கதை, மறைவிடம் ஆகிய புத்தகங்களை எழுதினார். அவை உலகப் பிரசித்தி பெற்றன.1947ல் அவர், தன்னை கொடுமைக்கு ஆளாக்கிய சிறைச்சாலை அமைந்திருந்த ரேவன்ஸ்பர்க் நகரத்திற்கு உரை நிகழ்த்த வந்தார்.
அவரிடம் ஆசிபெற மக்கள் வரிசையில் வந்தனர். அதில், கொர்ரியை கொடுமைப்படுத்திய காவலர் ஒருவரும் வந்தார்.அம்மையார் மனதில்,என்னை கொடுமைக்கு உள்ளாக்கியவனும் வரிசையில் வருகிறான். அவனை மன்னிப்பதா, கூடாதா? என ஒரு போராட்டம்...!வரிசை நகர்ந்தது. காவலனும் அருகில் வந்து விட்டான். அப்போது, இயேசு கிறிஸ்துவின் நினைவு அவருக்கு வந்தது.என்னை சிலுவையில் அறைந்தவர்களையும், கொடுமைப்படுத்தியவர்களையும் நான் மன்னித்தேன். என்னைப் போல நீயும் அவனை மன்னிக்கக் கூடாதா? என்று அவர் சொன்னது போன்றஉணர்வு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காவலரின் கரங்களைப் பற்றிய அம்மையார் அவருக்காகவும் ஜெபித்தார்.நான் உங்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராய் இருப்பீர்கள், என்ற பைபிள் வசனம்அம்மையாரின் வாழ்வில் நிஜமானது.