பதிவு செய்த நாள்
30
செப்
2015
12:09
திருச்சி: திருச்சியில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிய போது, பழங்கால கல் தூண்கள் வெளியே வந்தன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பனையபுரம் கிராமம் கொள்ளிடம் ஆற்றில், விதிமுறை மீறி மணல் அள்ளி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, பனையபுரம் கொள்ளிடம் ஆற்றினுள் மணல் அள்ளிய போது, 15 அடி உயரம், நான்கடி அகலம் கொண்ட கல் சுவர் இருந்ததைக் கண்டுபிடித்தனர். கல் சுவர் காணப்பட்ட இடத்தில் இருந்து, 200மீ., தூரத்தில் உழவாயி, உழவாண்ட கருப்புசாமி கோவில் அருகில் மண் அள்ளிய போது, மண்ணுக்குள் இருந்து கல் தூண்கள் வெளிப்பட்டன. இத்தகவல் பரவியதையடுத்து, கல் சுவர் மற்றும் தூண்களை பார்க்க பொதுமக்கள் வந்தனர். இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. கல் தூண்கள் மற்றும் சுவர் ஆகியவற்றை தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.