பதிவு செய்த நாள்
30
செப்
2015
12:09
திருச்சி: ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. இதில், 44.11 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதலாவதாக உள்ளது. வெளிநாடு, மாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தினமும் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக, 40க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல் வைத்துள்ளனர். மாதந்தோறும் இறுதி வாரத்தில், உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள், 44.11 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 89 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.