பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தசார திருவிழா பற்றிய தகவல்களையும், பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் , குலசேகரப்பட்டிணம் தசரா சேவை மையம், என்ற இணையதளத்தினை நேற்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா விழா குலசேகரப்பட்டிணத்தில் விமரிசையாக நடக்கும். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவிற்கான புதிய இணையதள சேவை மையம் நேற்று முதல்(அக்.,19) முதல் துவக்கப்பட்டுள்ளது. துவக்க விழா குலசேகரப்பட்டிணத்தில் நடந்தது. குலசை தசரா சேவை மையத்தின் தலைவர் வே.கண்ணன் தலைமை வகித்தார். ஆலோசகர் ஸ்ரீலஸ்ரீமகாராஜ சுவாமிகள் முன்னிலை வகித்தார். இணையதளத்தினை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நாடு முழுவதும் தசாா திருவிழா, நவராத்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் விரதமிருந்து பராசக்தியை வணங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டிணத்திற்கு வருகை தருகின்றனர். இந்த ஆலயத்தின் அருமை, பெருமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரயில்: பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து இரு சிறப்பு ரயில்கள் திருநெல்வேலிக்கு இயக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
10 ஆயிரம் கோடி: கிழக்கு கடற்கரை சாலை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி, நான்கு வழிச்சாலைகள் அமைக்க மாநில அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்காத பட்சத்தில் "பாரத் மாதா திட்டம் என்ற திட்டத்தின் கீழ் எல்லை பகுதிகளை மேம்படுத்தும் வகையில், கிழக்கு கடற்கரை சாலை எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான நிதி 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது, என அவர் தெரிவித்தார். வானதி சீனிவாசன், பா.ஜ., மாநில துணைத்தலைவர்: தசரா விழாவில் பங்கேற்கும், அனைவரையும் , இந்த வலை தளம் மூலம் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும், என அவர் தெரிவித்தார்.