கார்த்திகை கடைசி வெள்ளியில் குமாரகோயிலுக்கு காவடிகள் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2015 10:12
நாகர்கோவில்: கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி நூற்றுக்கணக்கான நேர்ச்சை காவடிகள் மேளதாளம் முழங்க பவனியாக குமாரகோயிலுக்கு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வேளிமலை குமாரகோயில்.இங்கு முருகன் இங்கு வள்ளியுடன் இருந்து அருள்பாலிக்கிறார். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் மலை மீது கட்டப்பட்ட இந்த கோயிலில் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையில் பக்தர்கள் காவடிகள் எடுத்து வருவது வழக்கம். குறிப்பாக மன்னர் <உத்தரவு படி மழை பொழிந்து மக்களின் செழிப்பான வாழ்க்கைக்கு பொதுப்பணித்துறையினரும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக காவல்துறையினரும் காவடி எடுத்து குமாரகோயிலுக்கு வந்தனர்.
மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும் இந்த மரபு மறக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை கடைசி வெள்ளியான நேற்று தக்கலை காவல் நிலையத்தில் இருந்தும், தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்தும் காவடிகள் அலங்கரிக்கப்பட்ட யானையுடன் புறப்பட்டு குமாரகோயிலுக்கு வந்தது. இதுபோல பத்மனாபபுரம், சாரோடு, வழிக்கலம்பாடு, முட்டைக்காடு, திருவிதாங்கோடு, இரணியல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் மேளதாளம் முழங்க குமார கோயிலுக்கு வந்தது. மலர்காவடி, வேல்காவடி, பறக்கும்காவடி என பல்வகை காவடிகளை சுமந்து பக்தர்கள் ஆடிப்பாடி வந்தனர். பின்னர் காவடிகளில் கொண்டுவரப்பட்ட புனித நீர் முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.