சபரிமலை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு 35 லட்சம் ரூபாய் வழங்கும் என்றும், சபரிமலை வரும் தமிழக அமைச்சரிடம் இதனை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் கூறினார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் மழை பாதிப்பில் இருந்து மீளவும், வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் சபரிமலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஐயப்பன் சன்னதியில் அஷ்ட திரவிய கணபதிஹோமம், இரவு சிறப்பு புஷ்பாபிஷேகம், மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் சிறப்பு பகவதி சேவை ஆகியவை நடத்தப்பட்டது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவ தேவசம்போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி போர்டு சார்பில் 10 லட்சம் ரூபாய், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒரு மாத அலவன்ஸ், தேவசம்போர்டு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் என 35 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு தமிழக அமைச்சர்கள் வரும் போது சன்னிதானத்தில் வைத்து இந்த தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.