ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சபரிமலை சென்று வருகின்றனர். அதிலும் வட மாவட்ட பக்தர்கள் தேனி, குமுளி வழியாக செல்வதை விட மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், ஆரியங்காவு, குளத்துபுழா வழியாக சபரிமலை செல்வதையே விரும்புகின்றனர். இதன் மூலம் பல ஆன்மிக நகரங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்லலாம் என்பதால் இந்த வழிதடத்தில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை தொடர் மழை, வெள்ளசேதம் இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்ததது. தற்போது சில நாட்களாக மழையில்லாததால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் சபரிமலைக்கு செல்பவர்களும், சென்று திரும்புபவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி, ஆண்டாளை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதனால் ரதவீதி பகுதிகளில் அதிக வாகன நெருக்கடி ஏற்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் சாலையோர சைவ ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.