பதிவு செய்த நாள்
04
ஜன
2016
11:01
அனுப்பர்பாளையம் : இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஸ்ரீராம ஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில், இயற்கை அழிவில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி, மஹா பிரத்யங்கரா யாக வேள்வி, பிச்சம்பாளையத்தில் நடந்தது. கொடையாஞ்சி, பிரத்யங்கரா பீடாதிபதி ஸ்ரீசக்தி சுகுமார சுவாமிகள் தலைமையில், 21 சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். இதற்காக, 10 அடி ஆழம், 10 அடி அகலத்தில், பிரமாண்டமான யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்து. இதில், ஐந்து டன் பல வகையான மரக்குச்சிகள், மூன்று டன் மிளகாய், நூறு கிலோ நெய், அனைத்து வகையான பழங்கள், முலிகை மற்றும் பூஜை பொருட்கள், யாக குண்டத்தில் இடப்பட்டன. இரவு, 10:30 மணிக்கு துவங்கிய யாகம் அதிகாலை, 5:00 மணி வரை நடந்தது.
அனுமன் சேனா நிறுவன தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், ""அழிவை தடுத்து நிறுத்துவதற்காகவும், வாழ்வில் தடைகளை நீக்கி, சுபிட்ஷம் பெறுவதற்காகவும் யாகம் நடத்தப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் என இதிகாச காலங்களிலும், மன்னர்கள் ஆட்சி காலத்திலும், இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யாக வேள்வி, சாமானிய மக்களிடமும் சேர வேண்டும் என்பதற்காக, திருப்பூரில் நடத்தி உள்ளோம், என்றார். மாநில தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சசிமான், கொள்கை பரப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.