பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் நூற்றாண்டை கடந்த பெருமைபெற்ற சீதா லஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அனுமன் பிறந்தார். அதையொட்டி நேற்று அனுமன் ஜெயந்தி வைபவம் நடத்தினர். அதிகாலை சுப்ரபாத சேவை விஸ்வரூப தரிசனம் செய்து வைத்து, ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து 108 வடமாலை, 1008 வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. ஆஞ்சநேய பக்தர்கள் ராமசங்கீர்த்தனம் பாடினர். உலக நலன் வேண்டி 1008 மந்திரங்களை வாசித்து ஆராதித்தனர். அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் ஆகியவற்றிற்கு பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண்கள் கோதுமை மாவில் அகல் விளக்கு செய்து, தீபம் ஏற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேயர், ஆண்டாள், லஷ்மி நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு அணிவித்து, வடைமாலை சாத்தப்பட்டது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில்அறங்காவலர் வெங்கடேச பாகவதர், நிர்வாகிகள் அன்பழகன், பழமலை, கவிதா அழகரசன், ரவிச்சந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.