பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
காஞ்சிபுரம்: பொங்கலுக்காக புது மண்பானை செய்யும் பணி, காஞ்சிபுரத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. மழை பாதிப்பால், கடந்த ஆண்டை விட குறைந்த எண்ணிக்கையிலே இப்பணி செய்யப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் அன்று, புது பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக காஞ்சிபுரத்தில், பொங்கல் பானை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், குடும்பத்திற்கு தகுந்தாற்போல் புதுப்பானை வாங்குவர். கடந்த ஆண்டு மழை பெய்து ஏரிகள் நிரம்பியுள்ளதால், பானை செய்வதற்கு தேவையான மண் எடுக்க முடியவில்லை.சிலர், தேக்கி வைத்திருந்த மண்ணை வைத்து பானை செய்துள்ளனர். காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் பல ஊர்களில் மண் எடுக்க முடியாமல் பானை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பானை, 35 ரூபாய்க்கும்; சிறிய பானை, 25 ரூபாய்க்கும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, அதை சந்தையில் லாபத்திற்கு தகுந்தவாறு விற்பனை செய்வர். இதுகுறித்து, பானை செய்யும் தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், வழக்கமாக பானை செய்ய ஏரியில் இருந்து மண் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தற்போது ஆட்சியர், தொழிலுக்காக மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளார். இருந்தும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் மண் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இருந்த மண்ணை வைத்து பானைகள் செய்துள்ளோம். வழக்கமாக, 600 பானைக்கு மேல் செய்வோம். இந்த ஆண்டு 200 பானைதான் செய்ய முடிந்தது, என்றார்.