பதிவு செய்த நாள்
16
ஆக
2011
11:08
திருப்பூர் : பசு கூட்டங்களுக்காக இரக்கப்பட்டு தனது சொந்த உடலை இழந்து துன்பத்தை சந்தித்தவர், திருமூலர். வாழ்வில் ஏற்பட்ட கவலைகளை திருமந்திரம் என்ற கலையாக அருளிய மகான் திருமூலர், என சொற்பொழிவாளர் சேகர் பேசினார். "எப்போ வருவாரோ ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, ஷண்முகானந்த சங்கீத சபா மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் திருப்பூரில் நடந்தது. "நெருப்பில் பூத்த மலர் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சேகர் பேசியதாவது: ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கையை பற்றி வெவ்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. எல்லோரும் ஒன்று என்கிற நம் மகான்களின் கருத்தே மிகவும் சிறந்தது. படித்து பட்டம் பெறுதல் பொது அறிவு; இறைவனை அறிவதே உண்மையான அறிவு என்ற தத்துவத்தை, வாழ்வியல் நெறியை முதன் முதலாக சொன்னவர் திருமூலர். ஆன்மிகத்திலும், வாழ்வியல் நெறியிலும் புதுமையான கருத்துகளை வழங்கியவரும் திருமூலர் மட்டுமே. "அகர முதல எழுத்தெல்லாம்... என்று வள்ளுவனும்; இயற்கையை மையமாக வைத்து இளங்கோவடிகளும் கடவுள் வாழ்த்து பாடினர். திருமூலரோ, "ஐந்து கரத்தனை யானை முகத்தனை... என்று விநாயகரை முன்வைத்து கடவுள் வாழ்த்து பாடினார். மற்றவர்களெல்லாம் கடவுளிடம் அறிவை வேண்டினார்கள்; திருமூலர் தனது அறிவை இறைவன் காலடியில் சமர்ப்பித்து, வழிநடத்த வேண்டினார். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களை மட்டுமே அனைவருக்கும் தெரியும்; மறைத்தல், அருளல் இரண்டையும் சேர்த்து ஐந்து தொழில்கள் என்றார், திருமூலர். கும்பம், மோதகம், பாசம், தந்தம், தும்பிக்கை மூலம் ஐந்து தொழில் புரியும் கடவுள் விநாயகர். தந்தத்தை கொண்டு மகாபாரதம் தந்தார்; தும்பிக்கை மூலம் நமக்கு நம்பிக்கை தருகிறார்; தாய் தந்தையே உலகம் என்ற உண்மையை உணர்த்திய முழுமுதற் கடவுளும் விநாயகரே.இதனால், விநாயகப்பெருமானை வணங்கி, திருமந்திரத்தை துவக்கினார்; மூவாயிரம் பாடல்களை அருளி ஆன்மிக புரட்சி செய்தார். அருணகிரிநாதர், திருமூலர் இருவருமே கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்றவர்கள். போட்டிக்காக தனது வித்தையை பயன்படுத்தி துன்பப்பட்டார் அருணகிரிநாதர். திருமூலரோ, பசுகளுக்காக இரக்கப்பட்டு, வித்தையை பயன்படுத்தி துன்புற்றார். கைலாயத்தில் இருந்து அகத்தியரை தரிசித்து தீட்சை பெற வந்தார், வடநாட்டு யோகி. சாத்தனூரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்ற இடையர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். மூலன் உயரிழந்தது கண்டு பசுக்கூட்டங்கள் கண்ணீர் வடித்தன. இதைப்பார்த்த யோகி, பசுக்கள் துன்பப்பட்டால் அவை சாப்பிடாது; நீர் பருகாது இறந்து விடும்; நாட்டுக்கு கேடு ஏற்படும் என்று கலங்கினார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலம், தனது உடலில் இருந்து விடுபட்டு மூலன் உடலில் புகுந்தார்; திருமூலராக எழுந்தார். மூலன் வந்துவிட்டான் என்று பசு கூட்டம், மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி நடந்தன; பசுக்களை விட்டு விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, அவரது சொந்த உடல் எரிக்கப்பட்டிருந்தது. சொந்த உடல் போனதற்காக அவர் வருந்தவில்லை; மூலன் உடலில் இருந்தே நாம் சமுதாயத்துக்கு தொண்டுசெய்ய முடிவெடுத்தார். தனக்கு வந்த கவலையை கலையாக மாற்றும் வண்ணம், திருமந்திரத் தை இயற்றினார். திருமூலரின் வாழ்வில் ஏற்பட்ட இன்ப துன்பங்களே, திருமந்திரத்தில் வாழ்க்கை நெறியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. விநாயகரை தொழுதால் சகல செல்வங்களும் பெருகும்; எந்த கடவுளை தொழுதாலும் வாழ்வில் துன்பமே வராமல் போகாது. திருமூலரை போல், வாழ்வில் ஏற்படும் கவலைகளை கலையாக மாற்ற பழகிக்கொண்டால், எப்போதும் இன்பமுடன் வாழமுடியும்.இவ்வாறு, சொற்பொழிவாளர் சேகர் பேசினார்.