பதிவு செய்த நாள்
11
மார்
2016
11:03
கரூர்: வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் திருவிழா, 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 15ம் தேதி வேடபரி, 16ம் தேதி தேர் வடம்பிடித்தல், 17ம் தேதி மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்பர். இவர்கள் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் வழிபட்ட பிறகு, காவிரி ஆற்றின் தென்கரை வாய்க்காலில் நீராடிவிட்டு வீரப்பூருக்கு செல்வது வழக்கம். தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கிறது. எனவே, 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மட்டும் தென்கரை வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்களிலும் மணப்பாறை குளித்தலை வழியாக மணல் லாரிகள் செல்ல தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.