பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 21 ஆண்டுகளுக்குப்பின் வரும் மார்ச், 18ல் நடக்கிறது. முன்னதாக, 27.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. கோவை மாவட்ட அம்மன் திருத்தலங்களில் சூலக் கல் மாரியம்மன் கோவில் பிரபலமானது. சக்தி வாய்ந்த அம்மனை, 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆண்டுதோறும், மா விளக்கு எடுத்து வழிபடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவிழா, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கவில்லை. பல நுாறாண்டுகள் பழமையான திருத்தேர், புதுப்பிக்கப்பட்ட பிறகே, விழா நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டதே தாமதத்துக்கு காரணமாகும். பழுதடைந்த தேருக்கு பதிலாக, புதுத்தேர் அமைக்கும் திருப்பணிகள், 27.5 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. வரும், 18ம் தேதி (பங்குனி, 5ம் தேதி), சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 21 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இதற்காக, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் கோவில் வளாக தரைதள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் வளாகத்தில், 15 தெய்வ சிலைகள் அமைக்கும் பணிகளும், யாகசாலை பணிகளும் வேகமாக நடக்கின்றன.
புரவிபாளையம் ஜமீனுக்கு உட்பட்ட, 8 கிராமங்களிலும், ஜமீனுக்கு உட்படாத, 10 கிராமங்கள் என, 18 கிராமங்கள், திருவிழா நாட்களில் விழாக்கோலம் கொண்டிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது. முன்னதாக, வரும், 16ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 17ம்தேதி காலை, 6:00 மணிககு மங்கள இசையும், தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. அன்று மாலை, 4:30 மணிக்கு புதிதாக, 27.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. வரும், 18 ம்தேதி அதிகாலை, 5:0௦ மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்குகிறது. அன்று காலை, 6:30 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், மாரியம்மன், விநாயகர் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும், மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.