பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
கருமத்தம்பட்டி: தட்டாம்புதுார் லட்சுமி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த தட்டாம்புதுார் லட்சுமி நகரில், லட்சுமி விநாயகர் கோவிலில் கடந்த சில மாதங்களாக, புதிதாக கோபுரம் மற்றும் மண்டபம் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிவுற்று, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல்கால ஹோமம், பூர்ணகுதி முடிந்து, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, இரண்டாம் கால ஹோமம் முடிந்து, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்றி, மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை,7:00 முதல் 8:15 மணிக்குள் லட்சுமி விநாயகர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.